காவல் நிலையத்தில் வெடிச் சத்தம்


காவல் நிலையத்தை ஆய்வு செய்யும் எஸ்.பி பத்ரி நாராயணன்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை காவல் நிலையத்தில் இன்று நண்பகல் பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. இதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்திருந்த பலரும் பயந்தவாறு ஓட்டம்பிடித்தனர். அது, தீபாவளிக்கு முறையான அனுமதி இல்லாமல் விற்பனை செய்ததால் பறிமுதல் செய்து வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் எழுந்த சப்தம்தான் எனப் பின்னர் தெரியவந்தது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை காவல் நிலையம் உள்ளது. இந்தக் காவல் நிலையத்தில் இன்று மதியம் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. காவல் நிலையத்தையும் தாண்டி ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவுக்கு இந்த சத்தத்தை மக்கள் உணர்ந்தனர். இதனால், முதலில் நாட்டு வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என வதந்தி பரவியது.

ஆனால், கடந்த மாதம் தீபாவளி நேரத்தில் மைலோடு, ஆலங்கோடு, சித்திரங்கோடு பகுதிகளில் முறையான அனுமதி பெறாமல் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் இருந்தும், அதேபோல் அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்தும் பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர்.

இந்தப் பட்டாசுகளை குவியலாக காவல் நிலையத்தின் 2-வது மாடியில் கழிப்பறைக்கு அருகில் சாக்கில் கட்டிப் போட்டிருந்தனர். அதிகமான வெயிலின் காரணமாகவும், பட்டாசுகள் ஒன்றோடு, ஒன்று உராய்ந்தும் இன்று மதியம் திடீரென மொத்தமாக வெடித்திருக்கின்றன. இந்த விபத்தில் காவல் நிலையத்தின் கண்ணாடி ஜன்னல்கள், சுவர் பூச்சு ஆகியவை மட்டும் சேதமாயின.

எஸ்.பி பத்ரி நாராயணன் ஆய்வின் போது...

இந்தப் பட்டாசு விபத்துக் குறித்துத் தெரியவந்ததும், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தக்கலை காவல் நிலையத்தில் வெடிவிபத்து நடந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

x