5 மாநில பேரவைத் தேர்தல்: 100 எம்பிக்களிடம் பொறுப்பை ஒப்படைத்த பாஜக!


அடுத்த ஆண்டு வரவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், பாஜகவுக்கான தேர்தல் பணிகளை கவனிக்கும் பொறுப்பை 100 எம்பிக்கள் வசம் ஒப்படைத்திருக்கிறது பாஜக தலைமை.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இதையொட்டி அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுமே அந்த மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கி இருப்பதுடன், பிரச்சார நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் இந்த 5 மாநிலங்களிலும் பாஜகவுக்கு வெற்றியைத் தேடித்தரும் பொறுப்பை, அக்கட்சியைச் சேர்ந்த 100 எம்பிக்கள் வசம் ஒப்படைத்திருக்கிறது பாஜக தலைமை. மாநிலங்களவை மற்றும் மக்களவை எம்பிக்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இந்த 100 எம்பிக்களுக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதிலிருந்து பாஜக தலைமை விலக்கு அளித்துள்ளது. 100 எம்பிக்கள் இனி இந்தக் கூட்டத்தொடர் முடியும்வரை அவைக்கு வரமாட்டார்கள் என்பதால், முக்கிய மசோதாக்கள் எதுவும் இந்தக் கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்கிறார்கள். தேர்தல் பணிக்காக அனுப்பப்பட்டுள்ள பாஜகவின் 100 எம்பிக்களில் மத்திய அமைச்சர்களும் இருக்கிறார்கள். இவர்கள், முக்கியமான நாட்களில் மட்டும் அவைக்கு வந்து அவை நடவடிக்கைகளில் பங்கெடுப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

இம்முறையும் உபியில் ஆட்சியை தக்கவைக்க நினைக்கும் பாஜக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த எம்பிக்களுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் தேர்தல் பணிக் குழுவில் அதிக எண்ணிக்கையில் இடமளித்திருக்கிறது. இதேபோல், தற்போது ஆட்சியில் இருக்கும் உத்தராகண்ட் மாநிலத்துக்கும் வெளி மாநில எம்பிக்களை தேர்தல் பணிக்காக அனுப்பி இருக்கிறது பாஜக. கோவா மாநில தேர்தல் பணிகளை கவனிக்க, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக எம்பிக்கள் அனுப்பப்பட்டுள்ளனர். மணிப்பூர் தேர்தல் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பை, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தங்கள் கட்சி எம்பிக்கள் வசம் ஒப்படைத்திருக்கிறது பாஜக.

இதேபோல் இமாச்சலப் பிரதேசம், டெல்லி மற்றும் ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் பஞ்சாப் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். பிஹாரின் பாஜக எம்பிக்கள் அம்மாநில எல்லையிலுள்ள உபியின் கிழக்குப் பகுதியிலுள்ள தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற பணிக்கப்பட்டுள்ளனர்.

x