புதுச்சேரி: புதுச்சேரியில் ஆறரை ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடியுள்ளன. இவற்றை திறக்க முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் மொத்தம் 507 ரேஷன் கடைகள் இருந்தன. இதில் 800 ஊழியர்கள் பணிபுரிந்தனர். புதுச்சேரியில் மொத்தம் 3.36 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. அதில் 1.8 லட்சம் அட்டைகள் ஏழை மக்களுக்கான சிவப்பு ரேஷன் அட்டைகள். 1.56 லட்சம் மஞ்சள் ரேஷன் அட்டைகள். மஞ்சள் அட்டைகள் வைத்துள்ளோரில் பொருளாதார நிலையில் நலிவடைந்த கீழ் நடுத்தட்டு மக்களும், ஏழைகளும் உண்டு. புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட அரிசிமூலம் பல குடும்பத்தினர் பயன்பெற்று வந்தனர்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில், இலவச அரிசி தரும் கோப்புக்கு அப்போதைய ஆளுநர் கிரண்பேடி அனுமதி தரவில்லை. அரிசிக்கு பதிலாக பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் தரும் திட்டத்துக்கு அனுமதி தந்தார். இதை தொடர்ந்து ரேஷன் கடைகள் மூடப்பட்டன. கரோனா ஊரடங்கின் போது, ரேஷன் கடைகள் இல்லாமல் அரசே சிக்கலில் ஆழ்ந்தது. இதன் பாதிப்பை அதிகாரிகளும் உணர்ந்தனர்.
இதையடுத்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ‘ரேஷன் கடைகளைத் திறந்து அரிசி, கோதுமை,அத்தியாவசிய பொருட்கள் தரப்படும்’ என்ற வாக்குறுதியை அனைத்துக் கட்சிகளும் முன்வைத்து பரப்புரை மேற்கொண்டது. தேர்தலில் வென்று ஆட்சியமைத்த என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணியும் இந்த வாக்குறுதியை தெரிவித்தன. முதல்வர் ரங்கசாமியும் சட்டப்பேரவையில் ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தார்.
ஆனால் ரேஷன் கடைகளை திறக்காததால் ரேஷன் கடை ஊழியர்கள் தொடங்கி, எதிர்க்கட்சிகளும் ரேஷன் கடைகளுக்கு எதிராக போராட்டங்களை முன் எடுத்தன. கிரண் பேடிக்கு பிறகுவந்த ஆளுநர் தமிழிசையும் இக்கோரிக்கையை பரிசீலிக்கவில்லை. மத்திய அரசிடமும் குடிமைப்பொருள் வழங்கல்துறையை நிர்வகிக்கும் பாஜக அமைச்சர் சாய் சரவணன் குமார் பல மனுக்களையும் தந்தார். பாஜக மாநிலத் தலைவரான மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதியும் மத்திய அரசை ரேஷன் கடைகளை திறப்பது தொடர்பாக நாடினார்.
ஆனால் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. பயனாளிகளுக்கு தரப்படும் இலவச அரிசிக்கான தொகையும் சரியாக தரப்படுவதில்லை. அத்தொகையும் குறைவாக இருந்த நிலையில் வெளிச்சந்தையில் அரிசியின் விலை கடுமையாக உயர்ந்தது மக்களை நேரடியாக பாதித்தது. ஆளும் அரசு தரப்பினர் இப்பிரச்சினையில் மவுனம் காத்தனர்.
இச்சூழலில் மக்களவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி பிரச்சாரத்துக்கு வந்தபோது பெண்கள் அதிகளவில் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தினர். தேர்தலுக்கு பிறகு ரேஷன் திறப்பாக உறுதி தந்திருந்தார். தற்போது மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. இச்சூழலில் தேர்தல் நன்னடத்தை விதிகளும் முடிவுக்கு வந்துள்ளது.
இது பற்றி பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போதும், தற்போதும் முதல்வர் ரங்கசாமியும், பாஜகவும் வாக் குறுதி அளித்தப்படி ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். விலைவாசி உயர்ந்துள்ளது. அரிசி மட்டுமில்லாமல் குறைந்த விலையில் மளிகை பொருட்களும் தர வேண்டும். புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழகப்பகுதிகளில் ரேஷன்கடைகளில் குறைந்த விலையில் எண்ணெய், பருப்பு வழங்குகின்றனர். இங்கும் அதுபோல் வழங்க வேண்டும். வாக்குறுதியை புதுச்சேரி அரசு உடன் நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர்.