ஜாமீன் கேட்டு மாரிதாஸ் மனு


மாரிதாஸ்

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு காஷ்மீராக மாறிவருவதாக யூடியூபர் மாரிதாஸ் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று மதியம், மதுரை சூர்யா நகரில் உள்ள வீட்டுக்குச் சென்ற காவல் துறை உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையிலான போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 153 ஏ (மத ரீதியான பிரிவினைவாத கருத்துகளைப் பரப்புதல்), 504 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்), 505(1), 505(2) (சமூக வலைதளங்கள் மூலம் அரசை மிரட்டுதல்), 124 ஏ (அரசின் மீது வெறுப்புடன் அவதூறு கருத்துகளை வெளியிடுதல்) போன்ற 5 பிரிவுகளின்கீழ் மதுரை புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாரிதாஸ், உடல் நலக்குறைவாக இருப்பதாகச் சொன்னதால் மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டு, தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் கேட்டு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார்கள் அவரது வழக்கறிஞர்கள். அதேபோல அவர் மீது போடப்பட்ட அத்தனை வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளில் பெரும்பாலானவை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பதால், 90 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகே அவர் ஜாமீன் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

மாரிதாஸ் கைது செய்யப்பட்டபோது, அதற்கு எதிராக பாஜகவினர் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரை வேனில் ஏற்றவிடாமலும் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் டாக்டர் சரவணன் உட்பட 50 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் (143), போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (353), குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்பு அளித்தல் (341), பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல் (283), நோய் பரப்பும் வகையில் சுற்றித் திரிதல் (270) உட்பட 6 பிரிவுகளில் திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

x