மோசடி வழக்கில் பதவியை இழந்த உபி பாஜக எம்எல்ஏ!


கப்பு திவாரி

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ கப்பு திவாரி என்ற இந்திர பிரதாப் திவாரி. இவர் மீது 29 வருடங்களுக்கு முன்பு மோசடி வழக்கு ஒன்று பதிவானது. இந்த வழக்கில் இப்போது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தனது எம்எல்ஏ பதவியை இழந்திருக்கிறார் கப்பு திவாரி.

உபியின் அயோத்யா மாவட்டத்திலுள்ள கொசைகன்ச் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருந்தார் கப்பு திவாரி. இவர் கடந்த 1990-91 கல்வி ஆண்டில் அயோத்தியின் சாக்கேத் கல்லூரியில் பி.எஸ்சி., பட்டப்படிப்புக்காக இணைந்தார். அப்போது, முதல் வருடம் போதுமான மதிப்பெண் பெறாமல் போனதால் 2-ம் வருட வகுப்புக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைச் சமாளிக்க கப்பு திவாரி, போலி மதிப்பெண் சான்றிதழை அச்சிட்டு சமர்ப்பித்து படிப்பைத் தொடர்ந்தார்.

இந்த சம்பவம் தெரிந்து, 1992-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி சாக்கேத் கல்லூரியின் முதல்வராக இருந்த பேராசிரியர் யதுவன்ஷ் ராம் திரிபாதி, ராமஜென்மபூமி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது இது தொடர்பாக கப்பு திவாரி மீது வழக்கும் பதிவானது. இந்த வழக்கு கடந்த 29 வருடங்களாக அயோத்தியின் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. விசாரணை முடிந்து கடந்த அக்டோபர் 18-ம் தேதி தீர்ப்பு வெளியானது.

அந்தத் தீர்ப்பில், கப்பு திவாரிக்கு 5 ஆண்டுகள் கடும் காவலுடன் ரூ.13,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக சிறைத் தண்டனை பெற்றவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நீடிக்க முடியாது. அவர்கள் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. இதன்படி கப்பு தீவாரி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட விவகாரம் உபி சட்டப்பேரவை முதன்மை செயலாளரால் பரிசீலிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கப்பு திவாரியின் எம்எல்ஏ பதவியை ரத்து செய்வதாகவும் அவரது கொசைன்கன்ச் தொகுதி அக்டோபர் 18 முதல் காலியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாக்கேத் கல்லூரியின் மாணவர் பேரவைச் செயலாளராகவும் இரண்டு முறை இருந்தவர் கப்பு திவாரி. இதன் பிறகு பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் இறங்கினார். ஏற்கெனவே சில முறை எம்எல்ஏவாகவும் இருந்தவர். அயோத்தியின் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டவர் கப்பு திவாரி. இவர் மீது ஆள்கடத்தல், மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன. விரைவில் உபி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவிருப்பதால் கப்பு திவாரியின் கொசைன்கன்ச் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருவதற்கு வாய்ப்பில்லை.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பின்னணி

மத்திய தேர்தல் ஆணையத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி கப்பு திவாரி தனது பதவியை இழந்திருக்கிறார். இதன், பிரிவு எண் 8(4) ல் ‘இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை பெறும் எம்பி அல்லது எம்எல்ஏக்கள் மூன்று மாதங்கள் வரை பதவி இழக்கத் தேவையில்லை. மேல் முறையீடு அல்லது மறு ஆய்வின் இறுதி தீர்ப்பு வரும்வரை அவர்கள் பதவியில் நீடிக்கலாம்’ என்று முன்பு இருந்தது.

இந்நிலையில், கடந்த ஜூலை 10-ல், தேர்தல் தொடர்பான ஒரு பொதுநல வழக்கின் தீர்ப்பில், 8(4) பிரிவானது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி அதை நீக்கிவிட்டது உச்ச நீதிமன்றம். இதனால், அந்த சட்டப்பிரிவின்கீழ் ஊழல் வழக்குகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழக்கிறார்கள். மேல் முறையீடு செய்வதற்கான அவகாசம் இவர்களுக்கு அளிக்கப்படாது.

பதவி இழந்த லாலு

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், காங்கிரஸின் மாநிலங்களவை எம்பியாக இருந்த ராஷீத் மசூத் முதல் நபராக தனது பதவியை இழந்தார். தொடர்ந்து, கால்நடை ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற மக்களவை எம்பியான ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தின் எம்பியான ஜெக்தீஷ் சர்மா ஆகியோரும் பதவி இழந்தது குறிப்பிடத்தக்கது.

x