மதுரை பகுதியில் வாட்ஸ்அப் குழுக்களில் நேற்று முதல் ஒரு செய்தி பரவலாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. ‘மதுரை நகருக்கு மேல் ஹெலிகாப்டரில் பறக்க ஆசையா? உடனே புக் செய்யுங்க. ரூ.6,499 மதிப்புள்ள டிக்கெட் இப்போது சலுகை கட்டணத்தில் வெறும் 5,000 தான்’ என்பதே அதன் உள்ளடக்கம்.
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தால் நாடே சோகத்தில் இருக்கும் நிலையில், இப்படியொரு விளம்பரம் சுற்றுவதால் இது போலியானது என்றும், நண்பர்களைக் கேலி செய்வதற்காகச் சிலர் விஷமத்தனமாக இதை அனுப்புகிறார்கள் என்றும் கருதப்பட்டது. இதுகுறித்து அந்த விளம்பரத்தில் உள்ள தொடர்பு எண்ணை 'காமதேனு' சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம்.
இதுகுறித்து அந்த நிறுவன ஊழியர் கூறும்போது, "கடந்த ஆண்டும் இதேபோல டிசம்பர் மாதம் ஹெலிகாப்டர் சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தோம். அதேபோல இந்த ஆண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலூர் அருகே உள்ள வைகைப் பொறியியல் கல்லூரியில் இருந்து புறப்பட்டு, மதுரையைச் சுற்றிவந்து மீண்டும் அதே கல்லூரியில் பயணிகள் இறக்கப்படுவார்கள்.
டிச.16 முதல் 22 வரையில் இந்த ஹெலிகாப்டர் இயக்கப்படும் என்றும், முன்பதிவு டிச.14 வரை நடக்கும் என்றும் ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். முழுக்க முழுக்க சுற்றுலா பயணிகளுக்காகவே இந்தத் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படுகிறது. எனவே, உள்நோக்கத்துடன் இதை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டுகிறோம்" என்றார்.