மதுரை குருவிக்காரன் சாலை 4-வது தெருவைச் சேர்ந்தவர் அச்சப்பன் மகாலிங்கம்(38). இவர் தன் மனைவி திவ்யாவுடன் திங்கள்கிழமையன்று (டிச.7) மதுரை ஆட்சியர் அலுவலத்திற்கு வந்து, ஆட்சியரின் கார் முன் நின்றபடி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, கணினி பொறியாளரான தன்னிடம், மதுரை நெல்பேட்டையில் இயங்கிவரும் மதுரையின் பிரபல அசைவ உணவகமான ‘அம்சவல்லி’யின் பங்குதாரராகச் சேர்த்துக்கொள்வதாகக் கூறி அதன் உரிமையாளர் 25 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டால் அவரும் அவரது பங்குதாரர்களும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்றும் அச்சப்பன் மகாலிங்கம் கூறினார்.
இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில் ஓட்டல் உரிமையாளர் அருண்ராஜ், அதன் பங்குதாரர்கள் அன்புச்செல்வன், மணிகண்டன் ஆகிய 3 பேர் மீதும் மோசடி வழக்குப் பதிந்து மதுரை விளக்குத்தூண் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.