கோவில்பட்டி: கோவில்பட்டியில் கடந்த ஜமாபந்தியின் போது வழங்கப்பட்ட மனு மீது ஓராண்டாகியும் நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறையை கண்டித்து இன்று தமாகாவினர் கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு விநாயகர் கோயிலில் மனுவை வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி நகராட்சி வார்டு எண் 23, 24 உட்பட்ட கடலையூர் சாலை, வள்ளுவர் நகர் பகுதியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்கள் 40 ஆண்டுகளாக நகராட்சிக்கு முறையாக தீர்வை செலுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களது குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
அதேபோல், கடந்த 2017-ம் ஆண்டு வள்ளுவர் நகர் பகுதியில் சர்வே எண் 513-ல் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக ஒரு சில நபர்களுக்கு இடையே ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு அப்போதைய வட்டாட்சியர் சர்வே எண் 513 முழுவதும் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதற்கு தடை விதித்தார்.
இந்தத் தடை கடந்த 7 ஆண்டுகளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தங்களது நிலங்கள், குடியிருப்புகளை பத்திரப் பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். பொது அமைதி நிலவி வரும் அப்பகுதியில் 2017-ம் ஆண்டில் வட்டாட்சியர் பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்து வேண்டும் என கடந்த ஆண்டு கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த ஜமாபந்தியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மனு வழங்கப்பட்டது. ஆனால், ஓராண்டாகியும் அவர்கள் வழங்கிய மனு மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதைக் கண்டித்து இன்று காலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள விநாயகர் கோயில் முன்பு வடக்கு மாவட்ட தமாகா தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் கருப்புத் துணிகளால் கண்களை கட்டிக் கொண்டு திரண்ட கட்சியினர், விநாயகரிடம் மனு வழங்க வந்தனர். அப்போது, வருவாய்த்துறை கண்டித்து கோஷங்கள் முழங்கினர். தொடர்ந்து விநாயகர் கோயிலில் மனுக்களை வைத்து தோப்புக்கரணம் போட்டு வணங்கினர்.
இது குறித்து கே.பி.ராஜகோபால் கூறுகையில், “ஜமாபந்தி என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்டது. இதில் வழங்கப்படும் மனுக்கள் மீது 7 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்பது விதி. ஆனால், நாங்கள் மனு வழங்கி 365 நாட்களை கடந்து விட்டது. ஜமாபந்தி விதியை பின்பற்ற வலியுறுத்தியும், மக்களின் மனுக்கள் மீது பாராமுகமாக இருந்து,
கண் துடைப்புக்காக ஜமாபந்தியை நடத்தும் அதிகாரிகளை கண்டித்தும் தெய்வத்திடம் முறையிட்டு வேண்டுவதற்காக, கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு விநாயகரிடம் மனு வழங்கும் போராட்டம் நடத்தினோம். இந்த பிரச்சினைக்கு வரும் 17ம் தேதிக்குள் தீர்வு காணாவிட்டால், 18-ம் தேதி ஜமாபந்தி அலுவலர்களை சிறைப்பிடிக்கும் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.