கன்னியாகுமரியில், பேருந்தில் இருந்து மீனவப் பெண் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவமும், அதன் காரணமாக பேருந்து ஓட்டுநர், நடத்துநர், நேரக் காப்பாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவமும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில், பயணிகளிடம் கனிவுடனும் அன்புடனும் நடந்துகொள்ளுமாறு, போக்குவரத்து ஊழியர்களுக்கு வலியுறுத்தும் வகையில் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் கவனம் ஈர்க்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண்மணி செல்வம், நேற்று முன் தினம் (டிச.6) குளச்சலில் மீன் வியாபாரத்தை முடித்துவிட்டு, வாணியக்குடிக்குச் செல்ல பேருந்து ஏறியபோது, கூடையில் மீன் நாற்றம் அடிப்பதாகச் சொல்லி நடத்துநர் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுள்ளார். இதனால் வேதனையடைந்த செல்வம், பேருந்து நிலையத்தில் நின்றபடி அழத் தொடங்கினார். பேருந்து நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் அதைக் காணொலியாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட, தமிழகம் முழுவதும் அந்தச் செய்தி பரவியது.
இதையடுத்து, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜின் அறிவுறுத்தலின்படி, தமிழகப் போக்குவரத்துத் துறையின் குமரி மாவட்டத் துணை இயக்குநர் ஜெரோலின், குளச்சலில் செல்வம் மீன் விற்றுக்கொண்டிருந்த பகுதிக்கே நேரில்போய் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். அத்துடன் அந்தப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர், நேரக் காப்பாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அதேபோல, மாணவ, மாணவிகள் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்படுவதில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பாரபட்சம் காட்டுவதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன.
இந்நிலையில், புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம் கோட்டம்) சார்பில், புதுக்கோட்டை பேருந்து நிலையத்தின் நேரக் காப்பாளர் பூத் அருகில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில், ‘அனைத்துப் பயணிகளிடமும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், மகளிர், பள்ளி / கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் மூத்த குடிமக்கள் என அனைவரிடமும் அன்பாகவும், பொறுமையுடனும் கனிவுடனும் நடந்துகொள்ள வேண்டும். அவர்களிடமிருந்து எவ்விதமான புகார்களும் இனி வரும் காலங்களில் வராத வண்ணம் சிறப்பாகப் பணிபுரிய வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக, புதுக்கோட்டை போக்குவரத்துக் கழக அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, “பயணிகளிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் எனும் உத்தரவு அரசு சார்பில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டதுதான்” என்று தெரிவித்தனர்.
இதுகுறித்துப் பேசிய சில நடத்துநர்கள், “கன்னியாகுமரியில் நடந்தது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைதான். எனினும், பணிச்சுமைகளுக்கு இடையில் சிலர் இப்படி நடந்துகொள்கிறார்கள். இப்படியான புகார்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், தவறின் அளவைப் பொறுத்து துறை சார்ந்து எச்சரிக்கைகள் விடுக்கப்படும். ஒருவேளை பொதுவெளியில் பெரும் சலனம் ஏற்படுத்தும் அளவுக்கு ஊடகங்களில் தகவல் வெளியாகிவிட்டால், பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்டோர் ஆளாக நேர்கிறது. இதுபோன்ற தருணங்களில் தனிநபர்களைத் தாண்டி அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றனர்.