பேருந்திலிருந்து மீனவப் பெண்ணை இறக்கிவிட்ட விவகாரம்: ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்


பேருந்து நிலையத்தில் அழும் செல்வம்

கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி பகுதியைச் சேர்ந்த பெண்மணி செல்வம். கடற்கரையில் மீனை மொத்தமாக வாங்கி குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தலைச்சுமையாக சுமந்து விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை குளச்சலில் மீன் வியாபாரத்தை முடித்துவிட்டு, தன் தலைச்சுமை வட்டையுடன் வாணியக்குடிக்குப் பேருந்து ஏறினார்.

நடத்துநர் டிக்கெட் கொடுத்துக்கொண்டே வரும்போது செல்வத்தைப் பார்த்து, “மீன் விற்றுவிட்டா வருகிறீர்கள். நாற்றம் அடிக்கிறது. பேருந்தில் இருந்து இறங்குங்கள்” எனச் சொல்லி, வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுள்ளார். இதைக் கேட்டதும் தாங்க முடியாத வேதனையுடன் பேருந்து நிலையத்தில் இருந்தே அழத் தொடங்கினார் செல்வம். அவரது இந்த அழுகுரலை பேருந்து நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோவாக எடுக்க அது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இதுகுறித்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கவனத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மனோதங்கராஜின் அறிவுறுத்தலின்படி, தமிழகப் போக்குவரத்துத் துறையின் குமரி மாவட்டத் துணை இயக்குநர் ஜெரோலின், குளச்சலில் செல்வம் மீன் விற்றுக்கொண்டிருந்த பகுதிக்கே நேரில்போய் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

மேலும், பேருந்தில் இருந்து செல்வத்தை இறக்கிவிட்ட ஓட்டுநர் மைக்கேல், நடத்துநர் மணிகண்டன், செல்வம் நேரில் போய் புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்காத நேரக் காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போக்குவரத்துத் துறை பொதுமேலாளர் அரவிந்த் பிறப்பித்துள்ளார்.

x