மதுரை மாநகருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 3 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கப்பட்ட நிதியில் 98 சதவீதம் செலவிடப்பட்டுவிட்டாலும்கூட, எந்தப் பணியும் முழுமைபெறாமல் இருந்தது. இருப்பினும் தேர்தல் நெருங்கியதால் வைகை ஆற்றின் இருகரைகளிலும் முழுமைபெறாமல் அரைகுறையாக போடப்பட்ட இரு சாலைகளையும், அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக அவசர அவசரமாகத் திறந்துவைத்தார். இன்னமும் அந்தப் பணி முழுமையடையவில்லை.
பெரியார் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்துகிறோம் என்று கூறி, கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மூடினார்கள். அதற்குப் பதிலாக 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் சொல்லொண்ணா தொல்லைகளுக்கு ஆளானார்கள். வெட்டவெளியில், வெயில், புழுதிக்கு நடுவே பேருந்து ஏற பெண்களும், குழந்தைகளும், முதியோரும் சிரமப்பட்டார்கள்.
பெரியார் பேருந்து நிலைய பணிகள் 2021 ஜனவரி மாதம் முடிவடைந்துவிடும் என்று அன்றைய அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். பிறகு, தேர்தல் நெருக்கத்தில் வைகை இருகரை சாலையுடன் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 50 சதவீதம் கூட பணிகள் முடிவடையாததால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பெரியார் பேருந்து நிலைய பணிகள் சுறுசுறுப்படைந்தன. கே.என்.நேரு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உட்பட பல அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தார்கள். முதல்வர் ஸ்டாலின் அதைத் திறந்து வைக்க வருகை தருவார் என்று கூறப்பட்டது. பெரியார் பேருந்து நிலைய திறப்பு விழாவுடன் கலைஞர் நூலக அடிக்கல் நாட்டுவிழாவையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
இந்தச் சூழலில், பெரியார் பேருந்து நிலையத்தை நாளை (புதன்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைப்பார் என்று அரசு அறிவித்துள்ளது. பேருந்து நிலையப் பணிகள் முழுமையடைந்துவிட்டன என்றாலும், வணிக வளாக வேலைகள் இன்னமும் பாக்கியிருப்பதாகத் தெரிகிறது. எப்படியோ, 2019 ஜனவரியில் தொடங்கிய பணிகள் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்தாவது முடிந்திருக்கிறதே என்று மதுரை மக்கள் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.
முதல்வர் ஏன் மதுரை வரவில்லை?
பெரியார் பேருந்து நிலையப் பணிகளில் திருப்தியில்லை என்று ஏற்கெனவே நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளிப்படையாகவே கூறியிருந்தார். இந்தப் பேருந்து நிலையத்துக்கு ரூ.160 கோடி என்பது அநியாயம். வெறும் 10 கோடியில் கட்டியிருந்தால்கூட இதைவிட நல்ல பேருந்து நிலையம் கட்டியிருக்க முடியும் என்று திமுகவினரும் கூறிவந்தனர். அதிமுக அமைச்சர்கள் கொள்ளையடித்துவிட்டுப் போன பேருந்து நிலையத்தை முதல்வர் நேரில் வந்து திறந்துவைத்தால், மக்கள் மனதில் இது திமுக கட்டிய பேருந்து நிலையம் என்றே பதிந்துவிடும். அவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டியதிருக்கும். எனவே, முடிந்தவரையில் இந்த விழாவை முதல்வர் தவிர்ப்பதே நல்லது என்று தெரிவிக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஏற்கெனவே அறிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனாலேயே முதல்வர் நேரில் வரவில்லை என்று கூறப்படுகிறது.