அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு நேற்று முடிந்திருக்கும் நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலா சந்தித்துப் பேசியிருப்பது, அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனிக் கட்சி தொடங்கி தேர்தலைச் சந்திக்கப் போவதாகச் சொன்ன ரஜினிகாந்த், கரோனாவைக் காரணம் காட்டி, தனது அரசியல் வருகைக்கே அடியோடு முழுக்குப் போட்டார். இருந்தபோதும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரை எப்படியாவது அரசியலுக்கு இழுத்துவர பகீரத பிரயத்தனம் செய்துகொண்டே இருந்தனர்.
குறிப்பாக, ரஜினிகாந்தின் மனைவி லதா இந்த விஷயத்தில் தீவிரம் காட்டியதாகச் செய்திகள் கசிந்தன. இதனிடையே ரஜினிகாந்தை தங்கள் அணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைக்க, வழக்கம் போல பாஜகவும் மெனக்கிட்டது. ஆனால், யாருக்கும் பிடிகொடுக்காமல் அமைதியாக ஒதுங்கிவிட்டார் ரஜினி.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சசிகலா இன்று ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். தாதா சாகேப் பால்கே விருதுபெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கவும் சசிகலா ரஜினியை சந்தித்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அதிமுகவில் தனக்கான அதிகாரத்தை நிலைநாட்ட, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் சசிகலா. இதையெல்லாம் பார்த்துவிட்டு, எப்படியும் கடைசியில் கட்சி சசிகலா கைக்குத்தான் போகும் என்ற நம்பிக்கையில் திடமாக இருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சிலர், அமைதியாக ஒதுங்கி இருக்கிறார்கள். இன்னும் சிலர் வெளிப்படையாகவே சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் சிலர் சசிகலா தரப்பில் மறைமுக பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். சொல்லப்போனால், அதிமுகவில் சசிகலாவைச் சேர்த்துக் கொண்டால் என்ன தவறு என்ற கேள்வி முன்னைவிட அதிகமாகவே, இப்போது அந்தக் கட்சிக்குள் கேட்க ஆரம்பித்திருக்கிறது.
இந்நிலையில், ரஜினிகாந்தை சசிகலா திடீரென சந்தித்திருப்பது உடல் நலம் விசாரிப்பதற்காக மட்டுமாக இருக்காது. இது அரசியல் ரீதியான சந்திப்பாகவும் தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் தனியாளாக கட்சி ஆரம்பிக்கத்தான் தயக்கம் காட்டுகிறார். அதிமுக என்ற இயக்கம் சசிகலாவின் தலைமைக்குக்கீழ் வந்தால், அவருடன் இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதில் ரஜினிக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. சசிகலாவின் அரசியல் மீள்வருகைக்கும் இது பலம் சேர்க்கும். அதேபோல், அரசியலுக்கு வரவேண்டும் என்ற தனது ரசிகர்களின் விருப்பத்தையும் குடும்பத்தினரின் விருப்பத்தையும் பூர்த்திசெய்ய, ரஜினிக்கு இது ஒரு வாய்ப்பாக அமையலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.