நடுத்தர வயதைக் கடந்து, வயோதிகத்தைத் தொட்டிருக்கும் இந்தப் பெண்மணி, பேருந்து நிலையத்தில் நின்று அழும் காட்சி மனசாட்சி உள்ள அனைவரையுமே உலுக்கும்.
குமரி மாவட்டத்தின் குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து வாணியக்குடி என்னும் தன் மீனவக் கிராமத்துக்குச் செல்ல பேருந்தில் ஏறிய செல்வம் என்னும் அந்த மூதாட்டி, மீன் விற்று விட்டு வருவதால் நாற்றம் அடிக்கிறது என பேருந்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளார் நடத்துநர்! இந்த மனிதத்தன்மையற்ற செயல் மீனவ மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். கடற்கரையில் மீனை மொத்தமாக வாங்கி குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தலைச்சுமையாக சுமந்து விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை குளச்சலில் மீன் வியாபாரத்தை முடித்துவிட்டு, தன் தலைச்சுமை வட்டையுடன் வாணியக்குடிக்குப் பேருந்து ஏறினார். நடத்துநர் டிக்கெட் கொடுத்துக்கொண்டே வரும்போது செல்வத்தைப் பார்த்து, “மீன் விற்றுவிட்டா வருகிறீர்கள். நாற்றம் அடிக்கிறது. பேருந்தில் இருந்து இறங்குங்கள்” எனச் சொல்லி, வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுள்ளார். இதைக் கேட்டதும் தாங்க முடியாத வேதனையுடன் பேருந்து நிலையத்தில் இருந்தே அழத் தொடங்கினார் செல்வம்.
ஒருகட்டத்தில் கோபமடைந்த செல்வம், அங்குள்ள நேரக்கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தின் முன்பு நின்றுகொண்டு, “என்னை எப்படி பஸ்ஸில் இருந்து இறக்கிவிடலாம்? நான் கம்ளைண்ட் கொடுப்பேன். நான் இங்கே இருந்து வாணியக்குடி வரை நடந்தா செல்வது?” எனக் கேட்டு உடைந்து அழுகிறார். இதை அந்தப்பகுதியில் பேருந்து ஏற நின்ற சிலர் வீடியோவாக எடுக்க, மூதாட்டியின் அழுகை வீடியோ இன்று காலை முதல் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.
வரலாறு தெரியாத நடத்துநர்!
தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் முக்கியமானது கன்னியாகுமரி. இங்கு ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மீனவர் வாக்குகளே உள்ளன. அதேபோல் முழுக்க மீன்பிடித் தொழிலைச் சார்ந்தே இருக்கும் இம்மக்கள், மீன்களைக் கொண்டு சென்று விற்பதற்காகவே கடலோர கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் சரிபாதி அளவு இருக்கைகளுக்குப் பதில் மீன் லோடு கொண்டு செல்லும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அரசும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் மீனவர்களுக்கு இந்த அளவுக்கு நேசக்கரம் நீட்டும் நிலையில், வரலாறு தெரியாமல் சில நடத்துநர்கள் இப்படி நடந்துகொள்வது மீனவ மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட மீனவப் பெண்மணி செல்வத்தை, அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளார் நேரில் அழைத்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதே அவரது மனவேதனையைத் தீர்க்கும் மருந்தாகும்!