ஓபிஎஸ்ஸை நம்பி வந்தவர்கள் என்ன ஆனார்கள்? - 1


மாஃபா பாண்டியராஜன்

வெற்றிகரமாக மீண்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை தனக்காக தக்கவைத்திருக்கிறார் ஓபிஎஸ். ஆனால், அன்றைக்கு இவருக்கு ஒரு ஆபத்து என்றபோது இவரை நம்பி இவருக்கு ஆதரவாக வந்தவர்கள் தான் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதைப்பற்றி விரிவாகப் பேசும் குறுந்தொடர் தான் இது. இனி வாரம்தோறும், ஓபிஎஸ்ஸை நம்பி வந்து தங்கள் அரசியல் இருப்பைத் தொலைத்தவர்களின் கதையை இந்தத் தொடர் பேசும்.

அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவைத் தட்டும் என்கிற பழமொழியைப் பொய்யாக்கியவர் ஓ.பன்னீர்செல்வம். 'நாளைய முதல்வர்' என்று மாதந்தோறும் ஒருவர் கிளம்பி காளான் போல மறைந்துபோகும் தமிழ்நாட்டில், அப்படி எந்த ஆசையும் இல்லாத ஓபிஎஸ்ஸுக்கு, ஒன்றல்ல, இரண்டல்ல, 3 முறை அந்தப் பதவி தேடிவந்தது. புத்திக்கூர்மை, செயலாற்றல், ஆளுமைத்திறன் போன்றவற்றைப் பார்த்து அவருக்கு அந்தப் பதவி தரப்பட்டதா? பணிவு, விசுவாசத்துக்காக தரப்பட்டதா? என்று விளக்கத் தேவையில்லை. மக்களுக்குத் தெரியும்.

இடைக்கால, தற்காலிக முதல்வராகவே மனதில் பதிந்துபோன அவரை, முதல்முறையாக தலைவராக மதித்து, மக்கள் கொண்டாடத் தொடங்கியது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான். ஜெயலலிதாவின் எளிதில் அணுகமுடியா பிம்பத்தைப் பார்த்துப் பழகிய மக்களுக்கு, ஜல்லிக்கட்டுப் போராட்ட காலத்தில் ஓபிஎஸ்ஸின் அணுகுமுறை ஆச்சரியத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தியது. முதன்முறையாக அவருக்கென ஒரு மக்கள் கூட்டம் திரளத் தொடங்கியது.

அன்றைய பொதுச் செயலாளர் சசிகலாவுடன், அன்றைய முதல்வர் ஓபிஎஸ். (கடைசி பொது நிகழ்ச்சி! )

'காமதேனு' இணையத்தில் அண்மையில், 'சிவகங்கையும், சிதம்பரமும்' அரசியல் தொடர் வெளியானது. அதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ்ஸை நம்பிக் கெட்டவர்களைப் பற்றிய இந்தத் தொடர் வெளியாகிறது. வாரந்தோறும்...

முதல்வர் நாற்காலியின் நுனியில் மட்டுமே உட்கார்ந்து கொண்டிருந்த மனிதர், முதல்முதலாக தன்னைத் தானே 'தலைவர்', 'முதல்வர்' என்று எண்ணத் தொடங்கிய அந்த நேரத்தில்தான், அதிமுக பொதுச் செயலாளரானார் சசிகலா. முதல்வர் நாற்காலியில் அமரும் ஆசை சசிகலாவுக்கு வந்ததும், 'பணிவுத்திலகம்' ஓபிஎஸ் வழக்கம்போல எழவைக்கப்பட்டார்.

சொல்லும் முன்பே எழுந்துவிடும் ஓபிஎஸ், முதன்முறையாக மிகுந்த தயக்கத்துடன் ராஜினாமா செய்தார். யாருடைய ஆலோசனையின் பேரிலோ, வரலாற்றிலேயே முதன்முறையாக ஓபிஎஸ், திடீர்ப் போராளியானார். கட்சித் தலைமைக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார். அதுவரையில் ஓபிஎஸ்ஸை நேரிலேயே பார்த்திராத பலரும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். ஆனால், ஓபிஎஸ்ஸின் சொந்த ஊர்க்காரர்கள், தேனி மாவட்டத்தினர், சொந்தச் சாதிக்காரர்களிடம் இருந்து அப்படியான ஆதரவுக் குரல் அப்போது எழவில்லை. ஏன் இப்படி என்று எல்லோருக்கும் ஆச்சரியம். இந்த முரணுக்குக் காரணம், இவரைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதுதான்.

ஓபிஎஸ் முழுச் சுயநலவாதி. தனக்கு, தன் பிள்ளைகளுக்கு, தன் குடும்பத்தினருக்காக மட்டுமே அவர் அரசியல் செய்கிறார். கட்சிக்காரர்களை கண்டுகொள்ளவே மாட்டார் என்பது அவர்களது புரிதல். அது உண்மைதான் என்பதை, தர்மயுத்த நேரத்தில் அவரை நம்பிப் பின்னால் அணிவகுத்தவர்களுக்கு நேர்ந்த கதி மெய்ப்பித்தது. ஓபிஎஸ்ஸால் பாதிக்கப்பட்டவர்களைப் பட்டியல் போட்டால், நீளும்.

'காமதேனு' இணையத்தில் அண்மையில், 'சிவகங்கையும், சிதம்பரமும்' அரசியல் தொடர் வெளியானது. ஓபிஎஸ்ஸை நம்பிக் கெட்டவர்களைப் பற்றிய இந்தத் தொடர் வெளியாவதற்கான காரணமும் அதுதான்.

இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு கேள்வி. ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு 12 எம்எல்ஏக்களும், 12 எம்பிக்களும் ஆதரவளித்தார்கள் அல்லவா? அதில் ஒரு பத்துப் பேரின் பெயர்களைச் சொல்லுங்கள் பார்க்கலாம். கூகுள் உதவியை நாடினாலும், பதில் கிடைப்பது சிரமமே. "அதிமுகவைப் பொறுத்தவரையில் ஓபிஎஸ் ஒரு கருந்துளை. நம்பி வந்தவர்களையும், நெருங்க நினைப்பவர்களையும் விழுங்கி ஏப்பம்விடுவதே அவரது இயல்பு" என்று குற்றம் சாட்டுகிறார்கள் அவரை நம்பிக் கெட்டவர்கள்.

தர்மயுத்த நாயகனுக்கு ஆதரவாக களமிறங்கிய மாஃபா பாண்டியராஜன்

இந்த வாரம் மாஃபா பாண்டியராஜன்!

சிறுவயதிலேயே தந்தையை இழந்து, சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தீக்குச்சி அடுக்கிப் பள்ளிக்கூடம் போய், பெரிய பெரிய படிப்பையெல்லாம் முடித்து, 1992-ல், ‘மாஃபா’ என்கிற மனிதவள நிறுவனத்தைத் தொடங்கியவர் க.பாண்டியராஜன். அன்றில் இருந்துதான், க.பாண்டியராஜன் ‘மாஃபா’ பாண்டியராஜன் ஆனார்.

வெறும் 60 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இவரது நிறுவனம், 2010-ல் ஆயிரம் கோடி ரூபாய் இலக்கை எட்டியது. இந்நிறுவனத்தின் வாயிலாக லட்சக்கணக்கானோருக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு பெற்றுத்தந்த மாஃபா பாண்டியராஜன், தனது தாயார் பெயரில் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனத்தையும் தொடங்கி, ஆயிரக்கணக்கான விதவைகளுக்கும், ஏழைப் பெண்களுக்கும் கணினி பயிற்சி, சிறுதொழில் பயிற்சி கொடுத்தார்.

சேவை எண்ணம் அரசியல் ஆசையாக மாற, பாஜகவில் சேர்ந்தவர், பிறகு விஜயகாந்தின் வளர்ச்சியைப் பார்த்து தேமுதிகவுக்குப் போனார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், விஜயகாந்த் குடும்பத்தினருடனான மனக்கசப்பின் காரணமாக எம்எல்ஏ பதவியுடன் ஆளுங்கட்சியான அதிமுகவில் ஐக்கியமானார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு ஆவடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் ஜெயலலிதா.

ஓபிஎஸ் பக்கம் மாஃபா...

தேமுதிகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் பத்துக்கும் அதிகமான எம்எல்ஏக்கள் சேர்ந்திருந்தாலும், அவர்கள் யாருக்குமே சீட் வழங்காத ஜெயலலிதா, இவருக்கு மட்டும் சீட் கொடுத்தார். அமைச்சரவையில் இவரது பெயர் வராமல் பார்த்துக்கொண்டது சசிகலா கூட்டம். "அமைச்சரவை மாற்றம் வருகிறது... உங்களுக்குப் பதவி தருகிறோம்" என்று சசிகலா தரப்பில் பேரம் பேசப்பட்டபோது, "அம்மாவாகப் பார்த்துத்தந்தால் தரட்டும். என்னால் எல்லாம் செலவழிக்க முடியாது" என்று நழுவியவர் மாஃபா. அப்படியிருந்தும் ஜெயலலிதா இவரது திறமைக்காகவே பள்ளிக் கல்வித் துறைக்கு அமைச்சராக்கினார்.

இன்றைய அமைச்சரும், அன்றைய திமுகவின் ஜூனியர் எம்எல்ஏவுமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முழுக்க முழுக்க அமெரிக்கன் ஸ்டைல் ஆங்கிலத்தில் சட்டசபையில் பேசியபோது, அதிமுக அமைச்சர்கள் பலர் என்ன பதில் சொல்வதென்று விழித்தார்கள். அப்போது, அதே ஆங்கிலத்தில் பதிலடி கொடுத்தவர் மாஃபா. பார்த்தார் ஜெயலலிதா, ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்துக்கு நிதி அமைச்சர் ஓபிஎஸ்ஸை அனுப்பாமல் பாண்டியராஜனை அனுப்பிவைத்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அமைச்சராகத் தொடர்ந்த மாஃபா, ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தத்துக்கு திரண்ட ஆதரவை சமூக வலைதளம் வழியாக தப்பாக கணித்தார். என்னதான் இருந்தாலும் அவர் கள அரசியல்வாதி கிடையாதல்லவா? சசிகலாவுக்கு ஆதரவான தனது ட்விட்டுக்கு ஏராளமான எதிர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, ‘மக்கள் குரலுக்கு செவிசாய்த்து ஓபிஎஸ் பக்கம் போவதாக’ இன்னொரு ட்விட் போட்டுவிட்டு, பன்னீரின் வீட்டுக்குப் போனார். கிரகம் ஆரம்பமாயிற்று.

"ஒரே ஒரு குருக்கள் வாறார்" என்பதுபோலிருந்த ஓபிஎஸ் அணிக்கு, இன்னொரு அமைச்சர் கிடைத்தது ஓபிஸ்எஸின் பேரம் பேசும் ஆற்றலை அதிகரித்தது. அணிகள் ஒன்றானபோது, கட்சியில் ஒருங்கிணைப்பாளர், ஆட்சியில் துணை முதல்வர் பதவியை பேரம் பேசி வாங்கிய ஓபிஎஸ், தன்னை நம்பிவந்த மற்றவர்களை பற்றிக்கவலைப்படவில்லை. மாஃபா பாண்டியராஜனுக்கு அவர் வகித்த பள்ளிக் கல்வித் துறையைத் திரும்பப் பெற்றுத்தருவதில்கூட அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை ஓபிஎஸ். தன்னிடமிருந்த வளமற்ற துறையான, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறையை மட்டும் விட்டுக்கொடுத்தார் செங்கோட்டையன். எம்எல்ஏவாக இருந்தபோதும் சரி, அமைச்சரான பிறகும் சரி பெரிய அளவில் பண மோசடி, ஊழல் குற்றச்சாட்டில் சிக்காத மாஃபாவுக்கு ஓபிஎஸ் கொடுத்த பரிசு அது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் மாஃபா...

கட்சியில் ஜெயலலிதா காலத்தில் கொடுக்கப்பட்ட கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பதவி மட்டுமே மாஃபாவிடம் இருந்தது. கூடுதல் பொறுப்பு எதையும் ஓபிஎஸ் வாங்கித்தரவில்லை. தேர்தல் நெருக்கத்தில் அதிமுக கட்சி மாவட்டங்களை இஷ்டம்போல் பிரித்து புதியவர்களுக்குப் பதவிகளை வாரி வழங்கியது. குறிப்பாக அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு. அதன்படி, 10 தொகுதிகளைக் கொண்ட திருவள்ளூர் தொகுதியை 5 மாவட்டமாகப் பிரித்தார்கள். அதில் ஒரு மாவட்டத்தின் செயலாளராக தன்னை நியமிப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்தேபோனார் மாஃபா.

2021 தேர்தலில் அவருக்கு மீண்டும் சீட் கொடுத்த விவகாரத்தில்கூட, ஓபிஎஸ் எடுத்த முயற்சியைவிட மாஃபா பாண்டியராஜன் எடுத்த முயற்சியே அதிகம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். எடப்பாடி பழனிசாமி ஆதரவு வேட்பாளர்கள் அனைவருக்கும் வஞ்சமில்லாமல் தேர்தல் செலவுக்குப் பணம் கொடுக்கப்பட்டது. மாஃபாவுக்கு அதுவும் கிடைக்கவில்லை. ஓபிஎஸ்ஸிடம் முறையிட்டபோது, "அமைச்சராக இருந்தீங்கள்ல... சம்பாதிச்சதை இறக்குங்க பாண்டியராஜன்... அப்புறம் பார்த்துக்கலாம்" என்று சொல்லிவிட்டாராம். "நாம என்ன இவரை மாதிரியா குவிச்சி வெச்சிருக்கிறோம்" என்று தலையில் அடித்துக்கொண்டவர், எதிர்பார்த்தபடியே தேர்தலில் தோற்றுப்போனார்.

"எல்லாம் நல்லதுக்கே, இனியும் ஓபிஎஸ்ஸை நம்பி அரசியலில் இருப்பதைவிட பேசாமல் நம்முடைய தொழிலைக் கவனிக்கலாம்" என்ற மனைவியின் சொல்லையே மந்திரமாக எடுத்துக்கொண்டு, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே விட்டார் மாஃபா பாண்டியராஜன்.

அமைச்சராக வந்தவருக்கே இந்தக் கதி! மற்றவர்கள் என்ன ஆனார்கள்? அடுத்த வாரம் பார்க்கலாம்.

x