முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் உயிரிழப்புக்கு போலீஸ் காரணமா?


மணிகண்டன்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் பகுதியில் கடந்த 4-ம் தேதி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாசனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், வாகனம் நிற்காமல் சென்றதால், போலீஸார் விரட்டிச் சென்று பிடித்துள்ளனர். விசாரித்ததில், அதை ஓட்டிவந்தவர் நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பது தெரியவந்தது.

மாலை 4.30 மணிக்குப் பிடிபட்ட மாணவரை விசாரணைக்காக அழைத்துச்சென்ற போலீஸார், காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு மணிகண்டனின் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய போலீஸார், அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறியிருக்கின்றனர். இரவில் தூங்கியவர், காலையில் எழவே இல்லை. படுக்கையில் அவர் இறந்து கிடந்ததைக் கண்டு பெற்றோர்களும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். போலீஸார் கொடூரமாகத் தாக்கியதால்தான் அவர் இறந்துவிட்டார் என்று கூறி, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள். உடலையும் பெற மறுத்து போராட்டமும் நடத்தினார்கள்.

சிசிடிவி பதிவில், விசாரணை முடிந்து மணிகண்டன் நடந்து செல்லும் காட்சி.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் ஆகியோரும் கண்டன அறிக்கை வெளியிட்டனர். இந்தச் சூழ்நிலையில், கீழத்தூவல் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவியில் பதிவான வீடியோக்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவரது இறப்புக்கு காவலர்கள் தாக்கியது காரணமில்லை என்று ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி, கார்த்திக் மறுப்பு தெரிவித்துள்ளார்.

“அப்படியானால் அவர் எப்படி இறந்தார்?” என்று உறவினர்கள் கேட்டதற்கு, ”வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கிறோம். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்ததும் மர்மம் விலகும்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தூத்துக்குடியில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, சமூக வலைதளங்களிலும் திமுக அரசு மீது விமர்சனம் எழுந்துள்ளது.

x