மாட்டு வண்டியில் பள்ளிக்கு வந்த தாளாளர்


அலிகான் (பள்ளித் தாளாளர்)

கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியில் இயங்கிவரும் ஆக்ஸ்போர்டு மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அலிகான், இன்று திடீரென பள்ளிக்கூடத்துக்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் வந்தார். இதைப் பார்த்த பள்ளிக் குழந்தைகள் உற்சாகம் அடைந்து, மாட்டுவண்டியில் ஏறி பள்ளி வளாகத்திலேயே உற்சாக உலா வரத் தொடங்கினர்.

மாட்டு வண்டியில் குழந்தைகள்

பள்ளித் தாளாளர் அலிகான், குழந்தைகளிடம் அன்றைய கால பயணம் பற்றிப் பேசியிருக்கிறார். அப்போது, “எங்கள் தலைமுறையில் எல்லாம் வீட்டுக்கு வீடு மாட்டுவண்டி இருக்கும்” எனச் சொல்லிவிட்டு, “மாட்டு வண்டியைப் பார்த்திருக்கிறீர்களா?” எனக் கேட்க, குழந்தைகளில் பலரும் ‘இல்லை’ என சொல்லியிருக்கிறார்கள். இதனாலேயே இன்று பள்ளிக்கு மாட்டுவண்டி பிடித்துவந்துவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அலிகான் கூறும்போது, ‘‘என்னதான் பாடக்கல்வியை படித்தாலும் அதையெல்லாம் தாண்டிய பயணம் தான் வாழ்க்கையை செழுமைப்படுத்தும். அதனால் அடிக்கடி குழந்தைகளிடம் பயணங்கள் குறித்து உரையாடுவேன். நேற்று மாட்டு வண்டிப் பயணம் பற்றிச் சொன்னேன். பல குழந்தைகள் அதைத் தெரியாது எனச் சொன்னார்கள்.

உடனே குளச்சலில் இருக்கும் ஒரு மாட்டு வண்டிக்காரரை வரச்சொல்லி, இன்று மதியம் வீட்டில் இருந்தே மாட்டு வண்டியில் பள்ளிக்குப் போனேன். இதைப் பார்த்ததும் குழந்தைகளும் உற்சாகமாக மாட்டு வண்டியில் ஏறி உலா வந்தார்கள். இதற்கு முன்பு, குழந்தைகளுக்கு காவல் துறை மீது பயமே இருக்கக் கூடாது, அவர்களை நண்பராக அணுகும் தன்மை வேண்டும் என்பதால் காவல் நிலையத்துக்கு அழைத்துப் போனேன். இதேபோல் தபால் நிலையம், வங்கி எனப் பல இடங்களுக்கும் அழைத்துப் போனேன். அந்த வரிசையில் இந்த மாட்டு வண்டிப் பயணமும் குழந்தைகளுக்கு குதூகலத்தோடு கூடிய கல்வியையும் கொடுக்கும். பாடப்புத்தகத்துக்கு வெளியே கொட்டிக் கிடக்கும் அறிவும் கிடைக்கும்’’ என்றார் அவர்.

x