அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைபாளர் பொறுப்புக்கான தேர்தல் முடிவை, அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இந்த இரு பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு டிச.2 அன்று வெளியானது. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும், டிச.4 அன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இது தவிர, இவர்கள் இருவருக்காகவும் கட்சியின் பல்வேறு மட்ட நிர்வாகிகளும் தனியாக வேட்பு மனுக்களை அளித்தனர். டிச.5-ல் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதன் அடிப்படையில், ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைபாளராக ஈபிஎஸ் ஆகியோர் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகவலை அக்கட்சியின் தலைமைக் கழகம் இன்று(டிச.6) அறிவித்தது.
முன்னதாக அதிமுகவின் கட்சி விதிகள் திருத்தப்பட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்தல் டிச.7 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து, வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முறையே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.