பத்மநாபபுரம் அரண்மனை கோட்டைச்சுவர் இடிந்து விழுந்தது


அரண்மனையின் பின்பகுதி

பத்மநாபபுரம் அரண்மனையின் கோட்டைச்சுவர் தொடர்மழை மற்றும் போதிய பராமரிப்பின்மையால் இன்று(டிச.6) இடிந்து விழுந்தது. அரண்மனை சுற்றுவட்டாரத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பது குறித்தும், இதனால் அரண்மனையின் கோட்டைச்சுவருக்கு ஆபத்து இருப்பது குறித்தும் ‘பத்மநாபபுரம் அரண்மனைக்கு ஆபத்து’ என காமதேனு இணையப்பக்கத்தில் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் கோட்டைச்சுவரின் ஒருபகுதி இன்று இடிந்து விழுந்துவிட்டது.

இடிந்து விழுந்த கோட்டைச்சுவர்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலைப் பகுதியில் பிரசித்திபெற்ற பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. கி.பி 1601-ம் ஆண்டு, திருவிதாங்கூரை ஆண்ட ரவிவர்மா குலசேகரபெருமாளால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. கி.பி 1795 வரை பத்மநாபபுரம் திருவிதாங்கூர் அரசின் தலைநகரமாக இருந்தது.

இப்போது இந்த அரண்மனை பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். பத்மநாபபுரம் அரண்மனையானது தமிழக நிலப்பரப்பில் இருந்தாலும், இந்த அரண்மனை மட்டும் கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கேரள தொல்பொருள் ஆரய்ச்சித் துறை, இந்த அரண்மனையைப் பராமரித்து வருகிறது. அதேநேரம் அரண்மனையின் வெளிப்புறச் சாலை, அரண்மனையின் கோட்டைச்சுவர் ஆகியவை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கேரள அரசு பத்மநாபபுரம் அரண்மனையை மிகச்சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது. ஆனால், தமிழக அரசு, அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தாததால் அரண்மனைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என முன்னரே எச்சரித்திருந்தோம். இப்போது பாரம்பரியமிக்க அரண்மனையின் கோட்டைச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இடிந்து கிடக்கும் கோட்டைச்சுவர்

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோட்டைச்சுவரானது, 18 ஆயிரம் மீட்டர் நீளம்கொண்டது. 20 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இந்தக் கோட்டைச்சுவர் கீழ்ப்பகுதியில் பாறாங்கற்களைக் கொண்டும், அதன் மேல் வெட்டுக் கற்களைக் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டையின் முகப்புப் பகுதியில் ஒரு பிரம்மாண்டமான வாசலும், சுவரைச் சுற்றிலும் 9 சிறிய வாசல்களும் உள்ளன. இந்தக் கோட்டைச்சுவர், எதிரிநாட்டினர் தங்கள் அரண்மனைக்குள் நுழைய முடியாதபடி யானைகளைக் கொண்டு மனிதர்கள் கட்டி எழுப்பியதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், காலப்போக்கில் உரிய பராமரிப்பின்றி இந்தக் கோட்டைச்சுவரின் கல் இடுக்குகளில் புதர்ச்செடிகள் முளைத்து பரிதாபமாகக் காட்சியளித்தது. இந்நிலையில் குமரியில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக, கோட்டைச்சுவரின் ஒருபகுதியான வாழவிளை ஆர்.சி. தெரு செல்லும் பகுதியின் ஓரத்தில் உள்ள சுவரின் வெளிப்பகுதி 200 மீட்டர் நீளத்துக்கு இடிந்து விழுந்தது. இதுகுறித்து கேள்விப்பட்டதும் அமைச்சர் மனோதங்கராஜ், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதேநேரம், கோட்டைச்சுவர் பொதுப்பணித் துறையின் ஆளுகையில் இருக்கிறதா அல்லது தொல்லியல் துறையின்கீழ் இருக்கிறதா என்பது அதிகாரிகளுக்கே தெரியாமல் குழம்பிவருகின்றனர்.

x