அம்பேத்கர் அஞ்சலியில் அடிதடி


கல்வீச்சு

மயிலாடுதுறை மாவட்டம், பட்டவர்த்தியில் அம்பேத்கர் நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், எதிர்ப்பு தெரிவித்தவர்களால் அடிதடி நடந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படம்

நாடு முழுதும் சட்டமேதை அம்பேத்கரின் 65-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தியில் அம்பேத்கர் சிலை இல்லாததால், புகைப்படம் வைத்து அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு, அங்குள்ள இன்னொரு சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், திட்டமிட்டபடி முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈழவளவன் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்போவதாக உறுதிபட அறிவித்திருந்தனர். இதனால் பாதுகாப்புக்காக காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

சம்பவ இடத்தில் எஸ்பி

இன்று ஈழவளவன், தனது ஆதரவாளர்களுடன் வந்து பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்தினார். அந்த நேரத்தில் அங்குவந்த எதிர் தரப்பினர் அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இவர்களும் திருப்பித் தாக்கினர். சிறிதுநேரத்துக்கு இருதரப்பினரும் கற்களை வீசியும், கட்டைகளாலும் தாக்கிக் கொண்டனர். அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் தலையிட்டு தாக்குதலை கட்டுப்படுத்தி பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுத்தனர். தாக்குதலில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருதரப்பையும் கட்டுப்படுத்தும் காவலர்கள்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், கோட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் உடனடியாக பட்டவர்த்தி சென்று இருதரப்பினரையும் சந்தித்துப்பேசி கலவரம் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

x