மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கன்னியாகுமரி மாவட்ட மதிமுக தொண்டர் ஒருவரது கடையில் டீ போட்டு, தொண்டர்களுக்கு வழங்கினார். இது மதிமுக தொண்டர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து குமரி மாவட்ட மதிமுக துணைச் செயலாளர் பொறியாளர் சுரேஷ்குமார் காமதேனுவிடம் கூறும்போது, ‘‘குமரி, கேரள எல்லையோரப் பகுதியான தமிழகத்தின் திருத்துவபுரம் பகுதியில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே போட்டிகளைத் தொடங்கிவைக்க மல்லை சத்யா அழைக்கப்பட்டு இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு நானும், மதிமுக தொண்டர்களும் நேற்று (டிச.5) மாலை அவரோடு பயணித்தோம். போகும்வழியில் மல்லை சத்யா தேநீர் குடிக்க வேண்டும் எனக் கேட்டதும், அருகில் மதிமுக தொண்டர் மாஹின் என்பவரது தேநீர் கடையில் வண்டியை ஒதுக்கினோம்.
அங்கே சென்றதும் மல்லை சத்யா அவரே டீ மாஸ்டர் ஆகிவிட்டார். டீக்கடைப் போட்டிருக்கும் மாஹின் உட்பட வந்திருந்த மொத்தத் தொண்டர்களுக்கும் அவரே டீ போட்டுக்கொடுத்தார். ‘மாமல்லபுரத்தில் ஆரம்பகாலத்தில் தானே உணவகம் போட்டிருந்ததாகவும், அதனால் இதில் தனக்கு பழக்கம் உண்டு’ என்றும் சத்யா சொன்னார். அப்போது மார்த்தாண்டம் பகுதிவாசிகள் சிலர் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். அவர்களுக்கும்கூட அவரே டீ போட்டுக்கொடுத்தார். அப்போது அங்கு கூடிய பொதுமக்களும் ’துரை வைகோ’வின் அரசியல் வருகையை வரவேற்று மல்லை சத்யாவிடம் பேசினார்கள். அவரும் பொதுமக்களின் உரையாடலை தலைவர் வைகோவிடம் நிச்சயம் சொல்வேன் என சொன்னார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருப்பவர் தொண்டர்களுக்கு டீ போட்டுக் கொடுத்த சம்பவம் எங்கள் அனைவருக்குமே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது’’என்றார் அவர்.