காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் 3 பிரதான பிராந்தியங்களில் தொடரும் தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் தாக்குதல்களில், கடந்த 21 ஆண்டுகளில் சுமார் 13 ஆயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்திய - மியான்மர் எல்லையில் அமைந்திருக்கும் நாகாலாந்து மாநிலத்தின் மோன் என்ற மாவட்டத்தில், சுரங்கத் தொழிலாளர்கள் பயணித்த வாகனம் மீது அஸாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு அங்கே பெரும் கலவரத்தை விதைத்துள்ளது.
நாகாலந்தில் செயல்பட்டுவரும் என்எஸ்சிஎன்(கப்லாங்) என்ற தீவிரவாத அமைப்பு, மோன் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல்களை அடுத்து பாதுகாப்பு படையினர் சனி(டிச.4) இரவு அங்கே விரைந்தனர். தீவிரவாதிகள் என கணித்து வாகனம் ஒன்றின் மீது தாக்குதல்கள் மேற்கொண்டனர். அதன் முடிவில் தங்களுக்கு கிடைத்த உளவுத் தகவல் தவறு என்றும், வாகனத்தில் பயணித்தவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்றும் பாதுகாப்பு படைக்கு தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் 6 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் சிலர், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இத்தகவல் தீயாய் பரவியதில் கோபமடைந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவரும் பொதுமக்கள் தரப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர். அந்த வகையில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அதன் பிறகு, பதற்றம் மற்றும் வதந்திகளை தவிர்க்கும் பொருட்டு மாநிலத்தின் இணைய சேவை நேற்று துண்டிக்கப்பட்டது. ஞாயிறு மதியம் நடைபெற்ற மற்றொரு தாக்குதலிலும் பொதுமக்களில் சிலர் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாயின.
நடந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(டிச.6) மாலை விளக்கமளிக்க உள்ளார். அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நாகாலந்து மட்டுமன்றி, அதை உள்ளடக்கிய வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் மற்றும் பல்வேறு மாநிலங்களின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில், பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் அப்பாவிகள் பலியாவது அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக 2000-ம் ஆண்டுக்குப் பிந்தைய கடந்த 21 ஆண்டுகளில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 4,900 பேர், அஸாம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் 4,300 பேர், நக்சல்கள் அதிகமுள்ள சட்டீஸ்கர், மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 3,900 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போலி என்கவுன்டர், தீவிரவாதிகள்-பாதுகாப்பு படை இடையிலான தாக்குதலில் குறுக்கிட்டவர்கள் ஆகியவை மட்டுமன்றி, நாகாலாந்தில் தற்போது நிகழ்ந்துள்ள தவறான தாக்குதல்கள் ஆகியவை மூலமாக 13,100 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவை அரசின் அதிகாரபூர்வமான கணக்குகளில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிபரம் என்பதால், உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாகவே இருக்கும் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.