‘உங்கள் துறையில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் 366 காவலர்களின் தண்டனை ரத்து


உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் வாயிலாக, காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களிடம் இருந்து அவர்களது குறைகள் மனுக்களாக பெறப்பட்டு, அவற்றுக்கு தீர்வும் காணப்பட்டு வருகிறது.

காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களிடம் அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள், உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் வாயிலாக பெறப்படுகின்றன. இதுவரை 5,236 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த மாவட்ட எஸ்பி, மண்டல டிஐஜி மற்றும் ஐஜிக்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தீர்வுகாணும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

இவர்களால் தீர்வுகாண முடியாத மனுக்கள் டிஜிபி சைலேந்திர பாபு மூலம் பெறப்பட்டு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதற்கும் மேலாக, முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 3-ம் தேதி தொடங்கிய சிறப்பு முகாமில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 300 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதேபோல் சென்னை காவலர்களிடம் டிச.8 முதல் 10 வரையிலும், கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் டிச.17, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் டிச.18-ம் தேதி சிறப்பு முகாம்கள் மூலம் மனுக்கள் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த ஜூலை முதல் நவம்பர் வரை சென்னை டிஜிபி அலுவலகத்தில் போலீஸார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மூலம் ஒழுங்கீன நடவடிக்கைகள் தொடர்பான தண்டனைகளை நீக்கக்கோரி அளிக்கப்பட்ட 1,058 மனுக்கள் உட்பட 1,340 பேர் மனுக்கள் அளித்துள்ளனர். அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அதில் 366 பேரின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமையகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 51 பேரை மீண்டும் பணிக்குத் திரும்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், 164 பேரின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x