அதிமுகவைச் சுற்றிய சிக்கல்களும் சர்ச்சைகளும் ‘கன்னித்தீவு’ கதையாக நீண்டுகொண்டே இருக்கின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சி, அதிகாரத்துக்கு சேதாரம் வராமல் பார்த்துக்கொண்டவர்கள், 5 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் கட்சி பக்கமே திரும்பியிருக்கிறார்கள். ஒற்றைத் தலைமை தேவை என்று அக்கட்சிக்குள் அவ்வப்போது எழும் சர்ச்சைகளுக்கு மத்தியில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். இதன் மூலம், ஒற்றை தலைமை என்ற வாதத்துக்கு மூடுவிழா நடத்தியிருக்கிறார்கள். நீடிக்கப்போகும் இரட்டைத் தலைமை யாருக்குச் சாதகம், யாருக்குப் பாதகம்?
அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களாக மாறுவதற்கு அடிப்படையே கட்சிதான். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதைப் போல, கட்சியானது கட்டுக்கோப்பாக இருந்தால்தான், ஆட்சி என்ற சித்திரத்தை அடைய முடியும். அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அக்கட்சிக்கு ஏற்பட்ட சோதனைகள் எல்லாம் ஒன்றரை ஆண்டுகளில் மறைந்தன. கட்சியின் ஒற்றை அதிகார மையமாக ஜெயலலிதா உருவெடுத்தார். ஆனால், ஜெயலலிதா மறைந்து (டிச.5) 5 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், கட்சி இன்னும் வீறுகொண்ட சிங்கம் போல எழ முடியவில்லை.
ஜெயலலிதா இருந்தவரை ‘ஒன் உமன் ஆர்மி’யாக அதிமுக இருந்தது. ராணுவக் கட்டுப்பாடு என்றெல்லாம் முழங்கினார்கள். ஆனால், சென்னை மெரினா கடற்கரையில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய பிறகு, இந்தக் காட்சிகள் எல்லாம் மாறின. கட்சியில் அணிகள் முளைத்தன; மீண்டும் அவை இணைந்தன. ஆனால், மனங்கள் இணையவில்லை என்றார்கள். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே இன்னும் அதிகாரப் போட்டி நீடிக்கும் நிலையில், சசிகலா இன்னொரு பக்கம் அதிமுக பொதுச் செயலாளர் என்று சொல்லிக்கொண்டு சுற்றி வருகிறார். இந்தப் பரபரப்புக்கு மத்தியில், அதிமுக சட்ட விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் அக்கட்சி பிரச்சினைகள் முடிவுக்கு வருமா?
எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவின் சட்டதிட்ட விதிகள், 1.11.1976-ம் ஆண்டில் விரிவாக உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்தபோது கடைசியாக 5.2.2007-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது, அடுத்தடுத்து விதிகள் திருத்தப்படுகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, சசிகலாவை வான்டடாக அழுது, கண்ணீர் சிந்தி அழைத்தார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். சசிகலாவால் பொதுச் செயலாளராக முடியாது. அதிமுகவில் ஒருவர் பொதுச் செயலாளராக வேண்டும் என்றால், 5 ஆண்டுகள் கட்சியில் இருந்திருக்க வேண்டும் என்று பேச்செல்லாம் எழுந்தது. 2011-ல் நீக்கப்பட்ட சசிகலா, 2012-ல் தான் மீண்டும் கட்சிக்குள் வந்தார் என்றும் சொன்னார்கள். அதனால், சட்டச் சிக்கல் என்றுகூட பேச்சு எழுந்தது. ஆனால், சசிகலாதான் ஜெயலலிதாவின் அடுத்த வாரிசு என்பதைக் காட்ட ஸ்ரீராம் சிட் பண்ட் ரசீதைக் காட்டிய ர.ர.க்கள், சசிகலாவுக்காக எந்தச் சட்டத்தையும் மாற்றுவோம் என்று சொன்னார்கள். அதன்படியே செய்தார்கள். அதிரடியாக பொதுச் செயலாளர் ஆனார் சசிகலா.
அதிமுகவில் உச்ச அதிகாரம் படைத்தது பொதுக்குழுதான். தலைமைக் கழகப் பொதுக்குழு, கழகத்தின் முழு அதிகாரங்களை கொண்ட தலைமை அமைப்பாகும். அதன் அடிநாதமாகச் செயல்படுபவர்தான் கட்சியின் பொதுச் செயலாளர். கட்சியில் அவருக்குதான் முதல் மரியாதை. பொதுக்குழுவின் முடிவே இறுதி முடிவாகும். சர்வ அதிகாரம் கொண்ட பொதுச் செயலாளர் என்ற பதவியோடுதான் சசிகலா சிறைக்குச் சென்றார். தான் வரும்வரை கட்சியைக் கவனித்துக்கொள்ள டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக்கிவிட்டுச் சென்றார். ஆனால், பாஜக வழிகாட்டலில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்த பிறகு காட்சிகள் தலைகீழாயின.
2017 செப்டம்பர் மாதத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில்தான், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டதாக அறிவித்தார்கள். சசிகலா மூலம் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனின் துணைப் பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதால், அந்தப் பதவியை ரத்து செய்வதாக அறிவித்தார்கள். அப்போதே, புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்க கட்சியின் விதிகளில் திருத்தமும் செய்யப்பட்டன. (இதையெல்லாம் எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது தனிக்கதை.)
இந்த விதி திருத்தத்தின்படி ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் ஆயினர். ‘ஆட்சிக்குத் துணை ஓபிஎஸ், கட்சிக்கு துணை ஈபிஎஸ்’ என்று ‘அண்டர்ஸ்டாண்டிங்’கில் பிரித்துக்கொண்டார்கள். அதன்படி, முதல்வர் என்ற அதிகாரத்தை ஈபிஎஸ்ஸால் முழுமையாகச் செலுத்த முடிந்தது. ஆனால், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ்ஸால் கட்சிக்குள் முழு அதிகாரம் செலுத்த முடியவில்லை.
இதனால், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்ற கோஷம் அவ்வப்போது எழுந்து மறைவது அதிமுகவில் அன்றாடக் காட்சிகளாயின. அண்மையில், இதே கருத்தோடு இரட்டைத் தலைமையை விமர்சித்த அன்வர் ராஜா, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கதையும் நடந்தது. இச்சூழலில் ஆட்சி அதிகாரம் கைவிட்டுப் போய் 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது அதிமுகவில் அடுத்த சுற்று தொடங்கியிருக்கிறது.
டிச.1 அன்று கூட்டப்பட்ட அதிமுக செயற்குழு கூட்டத்தில், பல புதிய முடிவுகளை இரட்டைத் தலைமை எடுத்திருக்கிறது. ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்குகள் மூலமாகவே தேர்ந்தெடுப்பார்கள்’ என்று அதிமுகவின் சட்ட விதி 20 (அ) 2 திருத்தப்பட்டுள்ளது. இதேபோல விதி 43-ல், ‘விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும் என்பது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல’ என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, விதி 45-ல், ‘அதிமுக சட்டதிட்ட விதிகளில் எதையும் தளர்த்தவும், விதிவிலக்கு அளிக்கவும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உண்டு’ எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானங்கள் மூலம் அதிமுக தொடர்ந்து இரட்டைத் தலைமையின்கீழ் செயல்படும் என்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. பொதுச் செயலாளர் (ஒற்றைத் தலைமை) என்ற பதவியை மீண்டும் உருவாக்கும் திட்டம் இல்லை என்றும் மெசேஜ் சொல்லியிருக்கிறார்கள். இது மட்டும்தான் கவனிக்கப்படும் விஷயம். மற்றவை எல்லாம் ‘டைட்டில்’ மாற்றங்கள்தான். அதாவது, பொதுச் செயலாளர் என்ற இடத்தில் ஒருங்கிணைப்பாளர் / இணை ஒருங்கிணைப்பாளர் என்று மாற்றப்பட்டுள்ளது. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர் / இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள், முன்பு பொதுச் செயலாளர் பதவியைப் போல கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், நாங்கள் கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோம்’ என்று ஓபிஎஸ் - ஈபிஎஸ் இனி சொல்லிக்கொள்ளலாம்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன. ஈபிஎஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுகவில் மேற்கு மண்டல லாபி அதிகரித்துள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ்ஸைவிட ஈபிஎஸ்ஸின் கை ஓங்கி உள்ளதும் கண்கூடு. 2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் பல முயற்சிகளை செய்துபார்த்தும் தோற்றுப்போனார் ஓபிஎஸ். எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பிடிக்கவும் முயன்று பார்த்தார். ஆனால், பலமான மேற்கு மண்டல லாபி, ஓபிஎஸ்ஸை நெருங்கவிடாமல் செய்தது.
அதாவது, ஆட்சிக்கு ஈபிஎஸ் என்று 2017-ல் மறைமுகமாக உருவாக்கப்பட்ட செயல் திட்டம் அப்படியே தொடர்கிறது. ஆனால், கட்சிக்கு ஓபிஎஸ் என்று வரும் இடத்திலும் ஈபிஎஸ் வந்து நிற்கிறார். இதனால்தான் 2 முறை, ’துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழுக்க கட்சிப் பணி செய்கிறேன்’ என்று ஓபிஎஸ் அறிவித்துப் பார்த்தார். அப்படியும் அவருக்கு எதுவும் நடக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு ஈபிஎஸ்ஸை பொதுச் செயலாளராக்க அவருடைய ஆதரவாளர்கள் களமிறங்கியதாக தகவல்கல் உலா வந்தன. இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ், அண்மைக் காலமாக தென் மண்டலத்தில் தனக்கான ஆதரவு எல்லையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாக அதிமுகவில் சொல்கிறார்கள். ஆனால், அது ஏன் நடக்கவில்லை?
இதுதொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம். “தேர்தலுக்குப் பிறகு கட்சிக்கு ஈபிஎஸ்ஸை ஒற்றைத் தலைமையாக்கும் முயற்சியில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். ஆனால், தேர்தலில் தொடர் தோல்வி, கோடநாடு விவகாரம் போன்றவற்றால் ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கடி ஏற்படும் என்று தெரியவந்தது. ஒற்றைத் தலைமைக்கு ஈபிஎஸ்ஸை முன்னிறுத்தினால், ஓபிஎஸ்ஸும் போட்டிக்கு வருவார். தென் மண்டலத்தில் அவருக்கு வாய்ஸ் கூடியுள்ளது. இதனால், அதிமுகவில் பழையபடி அணிகள் பிரிந்துவிடும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில், தன்னை பொதுச் செயலாளர் என்று கூறிக்கொள்ளும் சசிகலாவோடு ஓபிஎஸ் சேர்ந்துவிடுவார். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்துத்தான் ஓபிஎஸ்ஸோடு இரட்டை தலைமையைப் பகிர்ந்துகொள்ள மேற்கு மண்டல லாபி முடிவு செய்தது” என்று தகவல்கள் கொட்டின.
அதாவது, இப்போதும் கட்சிக்குள் ஓபிஎஸ்ஸுக்கு என தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது. அதுபோலவே ஈபிஎஸ் இல்லாமல் கட்சிக்குள் எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓபிஎஸ் தரப்போ, “இனி கட்சிக்குள் இஷ்டப்படி செயல்பட ஈபிஎஸ் கோஷ்டி ஆதிக்கம் செலுத்தாது. எந்த விஷயமாக இருந்தாலும் சேர்ந்துதான் முடிவெடுக்க முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு சாதகம்தான்” என்கிறது.
தற்போதைய சூழலில் ஒற்றைத் தலைமை என்ற முணுமுணுப்புக்கு அதிமுகவில் தடா போடப்பட்டுள்ளது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், பாஜக கூட்டணியோடு 2024 நாடாளுமன்ற தேர்தலைச் சந்திப்பது போன்றவை அதிமுக நெருப்பாற்றைக் கடக்கும் நிகழ்வாகவே இருக்கும். அதில் கிடைக்கும் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே அதிமுகவின் எதிர்காலம் மட்டுமல்ல... இரட்டைத் தலைமையின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும்!