ஆ...றுமுகசாமி ஆணையம்: அடுத்தது என்ன?


ஜெயலலிதா

ஒரு தலைவர் மறைந்த பிறகு என்னவெல்லாம் நடக்கக்கூடாதோ, அத்தனையும் நடந்துவிட்டது ஜெயலலிதா விஷயத்தில். அதை நடத்தியவர்கள் அவரது விரோதிகளாக இருந்தால்கூடப் பரவாயில்லை. அம்மா, தெய்வத்தாய், இதய தெய்வம், குலசாமி, என்று மூச்சுக்கு முந்நூறு தரம் முழக்கமிட்டவர்கள் ரத்தத்தின் ரத்தங்கள் என்பதுதான் வரலாற்று முரண்.

முதல்வராக இருந்தபோதே சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிச.5-ம் நாள் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது, அதுநாள் வரையில் ஜெயலலிதாவால் விலக்கிவைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட சசிகலாவின் சொந்தங்கள் எல்லாம் அவரது உடலைச் சூழ்ந்து நின்றதை அதிமுகவினரே அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். அடுத்த சில நாட்களிலேயே அதிமுகவுக்கு பொதுச்செயலாளரான சசிகலா, முதல்வர் பதவிக்கும் காய்நகர்த்த, வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்தார் ஓபிஎஸ். திடீரென யாரோ கொடுத்த தைரியத்தில், மத்திய அரசின் ஆதரவு நமக்குத்தான் இருக்கிறது என்றெண்ணி தர்மயுத்தமும் நடத்தினார் ஓபிஎஸ்.

சுற்றி நிற்கும் சசிகலா உறவுகள்...

அம்மாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், “சசிகலா குடும்பத்தினர் பற்றி 10 சதவீதம்தான் சொல்லியிருக்கிறேன். மீதி 90 சதவீதத்தை நேரம் வரும்போது சொல்லுவேன்” என்றார். இடையிலேயே ஊழல் வழக்கில் தண்டனை கிடைத்து சசிகலா சிறை செல்ல, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். தனக்கு துணை முதல்வர் பதவி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி என்று பேசி எடப்பாடியுடன் சமரசமானார் ஓபிஎஸ். ஆனால், வெளியே சொன்ன காரணமோ, அம்மாவின் மரணம் குறித்த உண்மையை வெளியே கொண்டுவர விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே ஒன்றிணைவதாகச் சொன்னார். அதன்படியே, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது.

விசாரணையைத் தொடங்கிய ஆணையம் சசிகலா, அவரது உறவினர்கள், ஓபிஎஸ் உள்ளிட்ட அன்றைய அமைச்சர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அப்போலோ நிர்வாகிகள், அதன் மருத்துவர்கள், அரசு மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது. 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல்செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், ஆரம்பத்தில் விசாரணை விரைவாக நடப்பது போல் தோன்றினாலும் நாளாக நாளாக அதில் தொய்வு ஏற்பட்டது. ஒவ்வொரு 3 மாதம் முடிந்ததும், அடுத்து 3 மாதம் என்று ஆணையத்துக்கான ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டதே தவிர, அறிக்கை வெளிவரவில்லை. அறிக்கை தரும்படி ஆணையத்தை யாரும் கட்டாயப்படுத்தவும் இல்லை.

ஆறுமுகசாமி

இச்சூழலில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை கோரி அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து. தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்ததால், உச்ச நீதிமன்றத்தை அணுகி தடைபெற்றது அப்போலோ. இதனால், சென்னை எழிலகத்தில் ஆணையத்துக்கென ஒதுக்கப்பட்ட அலுவலகம் மூடப்பட்டது. ஊழியர்களும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். விசாரணையும் முடங்கியது. ஆனாலும் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமியின் மனம் கோணாதவாறு தொடர்ந்து ஊதியம் வழங்கிய அதிமுக அரசு, இடைக்காலத் தடைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது.

இதற்கிடையில் தேர்தல் வந்தது. “ஜெயலலிதா மரணத்தின் உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்து அதிமுக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தெரிவிப்போம்” என்று வாக்குறுதி கொடுத்த திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. ஜூலை 24-ம் தேதியுடன் ஆணையத்தின் ஆயுட்காலம் முடியப் போகிறது என்றதும், முந்தைய நாளே ஆணையத்தின் ஆயுளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அரசாணை பிறப்பித்தது திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்தும், 6 மாதத்துக்கு மேலாகிவிட்டது, அறிக்கை வந்தபாடில்லை.

2017 செப்டம்பர் 15-ல் அமைக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் அறிக்கை தர வேண்டிய ஆணையம், வெற்றிகரமாக 4 ஆண்டுகளையும், 3 மாதங்களையும் கடந்து இழுத்துக்கொண்டிருக்கிறது. அதற்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் 11 முறை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. கரோனா பிரச்சினை, வெள்ள பாதிப்பு, நிதிப் பிரச்சினை, உள்ளாட்சித் தேர்தல் என்று ஏற்கெனவே ஏகப்பட்ட சிக்கல்களில் தவிக்கும் திமுக அரசு, அதிமுக அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு விவகாரத்தையோ, ஆறுமுகசாமி ஆணைய விசாரணை குறித்தோ அக்கறை செலுத்த நேரமும், ஆர்வமும் இல்லாமல் இருந்தது.

எஸ்.பி.லட்சுமணன்

இந்தச் சூழலில்தான், உச்ச நீதிமன்றம் கேட்ட சில கேள்விகள் இந்த ஆணைய விவகாரத்தில் அரசு இன்னமும் கால நீட்டிப்பு செய்தே கதையை ஓட்ட முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆறுமுகசாமி ஆணையம் என்ன மாதிரியான விசாரணை முறைகளைக் கடைபிடிக்கிறது? இதுவரையில் அமைக்கப்பட்ட பல ஆணையங்கள் போல இதுவும் முடிவு தெரியாத ஆணையமாகத்தான் இருக்கப் போகிறதா? என்று கேட்டதுடன், பிரமாண பத்திரமும் தாக்கல்செய்ய உத்தரவிட்டது. ஒரு மெகா சீரியல் முடிவை நெருங்கத் தொடங்கியிருக்கிறது.

இதுபற்றி மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான எஸ்.பி. லட்சுமணனிடம் கேட்டபோது, "கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் முழுவடைந்துவிட்டன. 119 சாட்சிகளில் ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் மட்டும்தான் இன்னும் விசாரிக்கப்படணும். முதலில், அப்போலா மருத்துவமனை தான் இந்த விசாரணைக்குத் தடை கேட்டு நீதிமன்றம் போனார்கள். அதற்கு 2 காரணங்கள். ‘எங்களைப் பற்றிய கமென்ட் வருகிற விஷயங்களை ஆணையத்தில் இருந்து யாரோ திட்டமிட்டே பத்திரிகைகளுக்கு லீக் பண்றாங்க. அடுத்து, விசாரணையின்போது எங்களுடைய டாக்டர்கள் சொல்கிற மருத்துவக் கலைச்சொற்களை தவறுதலாகப் பதிவு செய்யும் நிலை இருக்கிறது. எங்கள் தரப்பு நியாயத்தை அப்படியே பதிவு செய்ய ஆணையத்தில் மருத்துவ நிபுணர்களுக்கும் இடமளிக்க வேண்டும்’ இந்த வேண்டுகோளுடன் அவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியபோது, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், ‘ஆணையம் தன்னுடைய வரம்புக்குள் செயல்படணும்’ என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. காரணம், ‘எம்ஜிஆருக்கு என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது? அந்த விவரங்களைக் கொடுங்கள்’ என்றெல்லாம் ஆணையம் கேள்வி கேட்டதை, உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலும் இந்தப் பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா நினைவிடம்...

ஒரு நோக்கத்துக்காக விசாரணை ஆணையம் அமைத்தால், அந்த ஆணையத்துக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டியது அரசின் கடமை. இதை நீதிமன்றம் போய்த்தான் கேட்க வேண்டுமா? உண்மையை வெளியே கொண்டுவர வேண்டும் என்கிற உண்மையான அக்கறை இருந்திருந்தால், பழனிசாமி ஆட்சிக் காலத்திலேயே மருத்துவ நிபுணர் குழுவையும் போட்டிருப்பார்கள். ஐந்தாறு டாக்டர்களை நியமித்து, அப்போலா டாக்டர்கள் விசாரணைக்கு வரும்போது அவர்கள் சொல்வதை அருகில் இருந்து பதிவு செய்யுங்கள் என்று சொல்வதில் அரசுக்கு என்ன கஷ்டம் இருக்கிறது?

இதைவிடக் கொடுமை, அந்த கோர்ட் ஹால் வெறும் 200 சதுர அடி மட்டுமே இருந்தது என்கிற கசப்பான உண்மை, உச்ச நீதிமன்றத்தில் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. இந்த வசதி போதாது என்று அந்த ஆணையமும் வாய் திறந்து கேட்கவில்லை என்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் குட்டுவைத்த பிறகு இன்றைய அரசு கூடுதல் இடம் கொடுத்திருக்கிறது. ‘மருத்துவ நிபுணர்களுடன் தேவைப்பட்டால் சி.டி.செல்வம், பானுமதி போன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளையும் நியமித்து ஆணையத்தை விரிவுபடுத்துகிறோம்’ என்றும் அரசு சொல்லியிருக்கிறது.

அதேநேரத்தில், ‘சில சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யணும்’ என்று அப்போலோ கேட்டற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசு எதற்காக அதை எதிர்க்கணும்? மர்மம் வெளிவரணும் என்றால் எதற்காக சட்ட நடவடிக்கையை தடுக்கிறார்கள்? எடப்பாடி செய்த அதே தவறை திமுக அரசும் செய்கிறதோ என்கிற சந்தேகம் வருகிறது. எந்த உண்மையும் வெளிவரக்கூடாது என்று ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் கருதியிருக்கலாம், அதே எண்ணம் எதற்கு திமுக அரசுக்கு?

விசாரணையைத் துரிதப்படுத்தி, ஜெயலலிதா மறைவில் ஏதாவது மர்மம் இருந்தால் அதை வெளிக்கொண்டுவாங்க. இல்லைன்னா இல்லைன்னு சொல்லிட்டுப் போங்க. இன்னொரு விஷயம், யார் குற்றவாளி, யார் நிரபராதி என்றெல்லாம் தீர்ப்பு சொல்கிற அதிகாரம் ஆணையத்துக்குக் கிடையாது. தவறு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால், இவர்கள் மீதெல்லாம் வழக்குப்பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிந்துரை செய்யத்தான் முடியுமே தவிர, வேறு அதிகாரம் இல்லை. இதற்கே ஏன் இவ்வளவு தாமதம்?

‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருந்தால் அதை வெளிக்கொண்டு வருவோம் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுகவுக்கு, இந்த விசாரணை முழுமையாக நடக்க எல்லா வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு இருக்கிறது. அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகை செல்வனிடம் ஆணையத்தின் போக்குபற்றி கேட்டபோது, "உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக அரசு ஆணையம் அமைத்தது. வேண்டுமென்றே விசாரணையைத் தாமதப்படுத்தியதாகச் சொல்ல முடியாது. ஓபிஎஸ்ஸை அழைத்தால் அவர் சாட்சி சொல்லத் தயங்கமாட்டார்" என்று மேலோட்டமாகச் சொல்லி முடித்துக்கொண்டார்.

இதுவரையில் சாட்சி சொன்ன 115 பேரில் ஒருநபர்கூட ஜெயலலிதா இறப்புக்கு சசிகலாவோ, ஓபிஎஸ்ஸோ, எடப்பாடியோ அல்லது வேறு யாரோ சதி செய்தார்கள் என்று சொல்லியதாக பதிவாகவில்லை என்றே தெரிகிறது. ரூ.5 கோடி செலவழித்து எந்த உண்மையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது, அம்மா ஜெயலலிதாவுக்கே வெளிச்சம்!

x