ரேசன் கடைகளில் பொருட்களை இறக்கும் போது எடையை உறுதி செய்ய வேண்டும்: பதிவாளர் அறிவுறுத்தல்


சென்னை: நியாயவிலைக் கடைகளுக்கு பொருட்களை கிடங்குகளில் இருந்து அனுப்பும் போதே தரம், எடையை சரிபார்ப்பதுடன், கடைகளில் இறக்கும் போது அவற்றை மறுஎடையிட்டு, கடையின் பணியாளர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் 2.13 கோடி குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குகின்றனர். இவர்களுக்கு தரமாகவும், எடை குறைவின்றியும் பொருட்களை வழங்க வேண்டும் என்று கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், நியாயவிலைக் கடைகளுக்கு, அத்தியாவசியப் பொருட்களை கிடங்குகளில் இருந்து அனுப்பும் போதே அவற்றின் தரத்தை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் தரம் மற்றும் எடையை சரிபார்த்த பின்னரே அவைகளை லாரியில் ஏற்ற வேண்டும். மேலும், மண்டலங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் ஒவ்வொரு வாகனத்துடனும் 60 கிலோ எடை சரிபார்க்கும் மின்னணு தராசை எடுத்துச் செல்லவேண்டும்.

நிலையாயவிலைக் கடைகளில் பொருட்களை இறக்கும் போது, அதை மறு எடையிட்டு, கடை பணியாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கான தராசுகளை சம்பந்தப்பட்ட முதன்மை கூட்டுறவு சங்கங்களே வழங்க வேண்டும்.

மேலும், பொருட்களை கடைகளுக்கு அனுப்பும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்பதற்காகவோ, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காகவோ வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் இருக்கக்கூடாது. கடைகளில் பொருட்களை மறு எடையிட்டே வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.