ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட அடித்தளமிட்டவர் ரோசய்யா


ரோசய்யா

‘ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட அடித்தளமிட்டவர் ரோசய்யா’ என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த ரோசையாவுக்கு அஞ்சலி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ரோசய்யாவை சந்தித்த பிஆர் பாண்டியன் தலைமையிலான விவசாயிகள்

தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்று பலதரப்பட்ட மக்களின் அன்பை பெற்றவராக விளங்கியவர், முன்னாள் ஆளுநர் ரோசய்யா. விவசாயிகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆளுநர் என்கிற ஆடம்பரமின்றி அவ்வபோது அனைவரையும் சந்தித்து குறைகளை கேட்டறியும் மனப்பக்குவம் மிக்கவர். அவரது மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை கைவிட வலியுறுத்தி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கடந்த 2015 ஜனவரி 28-ம் தேதி, அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். முடிவில், அனைத்து கட்சிகளும் கையொப்பமிட்டு இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி பாரதப் பிரதமருக்கு ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தோம்.

பாதிப்பை ஈடுபாட்டோடு கேட்டுணர்ந்த ரோசய்யா, உடனடியாக மத்திய அரசுக்கு பரிந்துரைப்பேன் என்று உறுதியளித்தார். அதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவையில் ஆளுநரின் பரிந்துரை குறித்து கேள்வி எழுப்பியபோது, பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் கோரிக்கை மனு ஆளுநர் மூலமாக எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்துக்கு திட்டத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளோம்” என பதிலளித்தார்.

இந்த நடவடிக்கை தான், காவிரி டெல்டாவை இன்றைக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க அடித்தளமாக அமைந்தது.

இன்று அவர் மறைந்தாலும், காவிரி டெல்டா விவசாயிகள் அவருடைய புகழை என்றென்றைக்கும் நினைவுகூர்வோம். அவரது மறைவு தென்னிந்தியாவுக்கு மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தமிழக விவசாயிகள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று பி.ஆர். பாண்டியன் புகழாரம் சூட்டியுள்ளார்.

x