கேரளாவில் நோரோ, கர்நாடகத்தில் ஒமைக்ரான்!


கேரளத்தின் நோரோ வைரஸ் நோயாளிகள்

கேரளத்தில் பரவும் நோரோ வைரஸ், கர்நாடகத்தில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் கரோனா ஆகியவற்றால் தமிழக எல்லைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் கரோனா, டெங்கு பாதிப்புகளுக்குப் போட்டியாக நோரோ வைரஸ் பரவி வருகிறது. இதன் பரவும் வேகம் அதிகம் என்பதாலும், பரவலுக்கு தற்போதைய பருவ காலம் உதவும் என்பதாலும், நோரோவுக்கு எதிரான சுகாதாரம் மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் அங்கே தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல கர்நாடகத்தில், கரோனாவின் புதிய வீரிய உருமாற்றமான ஒமைக்ரான் பரவல் 2 நபர்களுக்கு நேற்று(டிச.2) உறுதி செய்யப்பட்டது. இருவரில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டிலிருந்து திரும்பியவர். மற்றொருவருக்கு தொற்றின் மூலம் கண்டறிய முடியாததில், ஒமைக்ரான் பரவல் ஏற்கெனவே அதிகரித்திருக்கக் கூடும் என அனுமானிக்கப்படுகிறது.

இப்படி 2 அண்டை மாநிலங்களும் வைரஸ் பரவலுக்கு ஆளாகி இருப்பதால், அவை தமிழகத்தில் ஊடுருவாதிருக்க, மாநில எல்லைகளின் நுழைவாயில்களில் வைரஸ் பரவல் அறிகுறிகளை கண்டறியும் சோதனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளன. எவரேனும் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டால் அவரது நோய் பின்னணி உறுதியாகும் வரை தனிமைப்படுத்துமாறும் தமிழக பொதுசுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

நிதர்சனத்தில் மனிதர்கள் வகுக்கும் எல்லைகள் மற்றும் அதன் கட்டுப்பாடுகள் மூலமாக, ஒமைக்ரான் உள்ளிட்ட வைரஸ்களின் பரவலைத் தடுத்துவிட முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே விளக்கமளித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் அடையாளம் காணப்பட்டதுமே, பல்வேறு நாடுகளும் தங்கள் எல்லைகளை இறுக்கிக்கொண்டன. அப்போது இந்த விளக்கத்தை அளித்த உலக சுகாதார நிறுவனம், முந்தைய கரோனா அலைகள் தந்த பாடத்தின் அடிப்படையில், புவி எல்லைகளால் வைரஸ் பரவலை தடுக்க முடியாது என்றது. முகக்கவசம், தனிநபர் இடைவெளி, தடுப்பூசி ஆகியவற்றை கண்டிப்பாகப் பின்பற்றுதல், அறிவியல்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

எனவே, எல்லைகளின் கண்காணிப்பு வாயிலாக வைரஸ் பரவலைத் தடுத்துவிடுவார்கள் என்று வாளாவிருக்காது, பொறுப்புணர்வோடு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது பொதுமக்களின் முக்கிய கடமையாகிறது.

x