தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, வேளச்சேரி தலைமைச் செயலக காலனி பகுதியைச் சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரி வெங்கடாசலம். இவர் சுற்றுச்சூழல் துறையில் பணி ஓய்வுபெற்ற பின்னர், 2019-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். அங்கு இரண்டாண்டு பதவி வகித்த வெங்கடாசலம், 2021 செப்.23-ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
அவர் ஓய்வுபெற்ற நாளன்று, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். இதைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், வெங்கடாசலம் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர்.
சோதனையில் ரூ.13.50 லட்சம் பணம், 11 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 15.25 கிலோ சந்தன மரப்பொருட்களை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வெங்கடாசலத்திடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில், வெங்கடாசலம் மன உளைச்சலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று(டிச.2) மாலை வேளச்சேரி தலைமைச் செயலகக் காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீஸார், வெங்கடாசலத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.