மதுரையில் காங்கிரஸ் - பாஜக பலே போஸ்டர் யுத்தம்!


போட்டி போஸ்டர்கள்

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். கூடவே, பிரதமர் மோடியையும் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மதுரையில் கடந்த ஞாயிறன்று நடந்த பாஜக கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட பாஜக தலைவருமான டாக்டர் சரவணன், "ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரையில் கால்வைக்க கூட முடியாது. அவர் மதுரையில் கால் வைத்தால் அவரை தாக்குபவர்களுக்கு லட்சம் ரூபாய் பரிசு வழங்குவேன்" என்று அறிவித்தார்.

டாக்டர் சரவணன்

இந்த மோதல் மதுரையைத் தாண்டி கொங்கு மண்டலம் வரையில் எதிரொலித்தது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், டாக்டர் சரவணன் மீது போலீஸில் புகார் கொடுத்தனர்.

இதற்கிடையே, பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மதுரையில் இன்று பாஜக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. இதையறிந்த காங்கிரஸார் அங்கே, டாக்டர் சரவணனை கண்டித்து போஸ்டர் ஒட்டினார்கள்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

‘மதிப்புக்குரிய எங்கள் தன்மானத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை அவதூறாகப் பேசிய டாக்டர் சரவணனை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. போஸ்டரைக் கண்ட பாஜகவினர் உடனடியாக அதற்குப் பதிலடியாக, ‘அரசியல் அகதி ஈவிகேஎஸ் இளங்கோவனே மன்னிப்புக் கேள்’ என்று பதில் போஸ்டர் ஒட்டினார்கள்.

காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி போஸ்டர் யுத்தம் நடத்திக் கொண்டிருப்பதை, மதுரை மக்கள் வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

x