தை முதல் நாளில் மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு?


மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை எழத் தொடங்கிவிட்டது. 'இனிய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயருடனும் தமிழக அரசின் முத்திரையுடனும் உள்ள கைப்பை சமூக ஊடகங்களில் வேகமாகச் சுற்றத் தொடங்கிவிட்டது. பொங்கல் பண்டிகைக்காகத் தமிழக அரசு 2 மாதங்களுக்கு முன்பே அறிவித்த 21 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசுப் பையாக இது இருக்கும் என்று தெரிகிறது. திமுகவினரின் பதிவுகளும் அதையே சொல்கின்றன. அப்படியெனில், 2008-ல் தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை மாதத்திலிருந்து தை முதல் தேதிக்கு மாற்றியதைப் போல இப்போதும் மாற்றப்பட உள்ளதா?

தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள்தான் என்று ஒரு தரப்பினரும், சித்திரை முதல் நாள்தான் என்று இன்னொரு தரப்பும் விவாதிப்பது பல ஆண்டுகளாகவே நீடிக்கும் விஷயம். தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளில்தான் எனப் பல சந்தர்ப்பங்களில் பேசிவந்த கருணாநிதி, ஒருகட்டத்தில் அதைச் செயல்படுத்தவும் செய்தார். 2007 வரை தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாளில்தான் கொண்டாடப்பட்டு வந்தது. தமிழ் ஆன்றோர்கள், சான்றோர்கள் ஆகியோர் வலியுறுத்தியதின் அடிப்படையில் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக கருணாநிதி அரசு அறிவித்தது. அந்த நாளை உற்சாகமாகவும் கொண்டாடியது தமிழக அரசு. அரசு அலுவலகங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அரசு அதிகாரிகள் தமிழ்ப் புத்தாண்டையும் பொங்கல் திருநாளையும் கொண்டாடினர்.

ஆனால், பல கருத்தியல் கொண்ட கட்சிகள், அமைப்புகள் உள்ள தமிழகத்தில், இதுபோன்று தேதியை மாற்றும்போது ஒருமித்த கருத்து எதையும் அரசு ஏற்படுத்தவில்லை. திமுகவும் அதிமுகவும் திராவிடக் கட்சிகள் வரிசையில் வந்தாலும், தமிழ்ப் புத்தாண்டு தேதி மாற்றத்தை அதிமுக ஏற்கவில்லை.

2011-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் சித்திரை முதல் தேதிக்கு மாற்றப்பட்டது. 2011 ஆகஸ்ட் 23 அன்று இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, “கருணாநிதியின் சுய விளம்பரத்துக்காக, மக்கள் உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை ரத்து செய்கிறேன்” என அறிவித்தார். இதையடுத்து தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் சித்திரை முதல் தேதிக்கு மாறியது. ஆனால், “அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும், நம்மைப் பொறுத்தவரை தமிழ்ப் புத்தாண்டு தை முதல் தேதிதான். அன்றே தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்” என்று கருணாநிதி அறிவித்தார்.

அதன்படியே திமுகவினர் தமிழ்ப் புத்தாண்டை தை முதல் நாளில்தான் கொண்டாடி வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சியே இருந்ததால், தமிழ்ப் புத்தாண்டு தேதியில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

ஆனால், தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்ப் புத்தாண்டு தேதி மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகுமா என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால், அண்மையில், தமிழக அரசின் 2022-ம் ஆண்டின் அரசு விடுமுறைப் பட்டியல் வெளியானது. அதில், தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 என்று குறிப்பிடப்பட்டு, விடுமுறை நாளாகப் பட்டியலில் இடம்பெற்றது. இதையடுத்து, திமுக அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதா என்ற கேள்வியும் எழுந்தது. “கருணாநிதி மகன் என்று சொல்லிவிட்டு ஜெயலலிதாவை மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார்” என்று விடுமுறைப் பட்டியல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது முதல்வர் பெயருடன் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளுடன் கைப்பை வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் தை முதல் தேதிக்கு மாறுகிறதா என்ற கேள்வியை அழுத்தமாக இது எழுப்பியிருக்கிறது. இதுவரை அதற்கான சட்ட முன்வடிவு எதுவும் பேரவையில் கொண்டுவரப்படவில்லை. அரசு நினைத்தால், அவசரச் சட்டமாகப் பிறப்பித்துவிட்டு, பிறகு பேரவையில் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தக் கைப்பை சமூக ஊடகங்களில் சுற்றத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக-பாஜகவினர் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டு வருகிறார்கள். திமுக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தாலும், இதை இக்கட்சிகள் எதிர்க்கவே செய்யும். அந்த வகையில் தமிழ்ப் புத்தாண்டு தேதி மீண்டும் சர்ச்சையை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாததாகிறது!

x