142 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை


முல்லை பெரியாறு அணையின் மொத்த நீர்த்தேக்க அளவு 152 அடி. அணை பலவீனமாக இருப்பதாகக்கூறி, எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் ஒப்புதலுடன் அதை 136 அடியாகக் குறைத்தது கேரள அரசு. பல கோடி செலவில் அணை பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இருப்பினும், 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தனர் கேரள அரசியல்வாதிகள். இரு மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வந்துவிட்டபோதிலும்கூட, தனிநபர்கள் சிலர் தனித்தனியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது தொடர்கிறது. அப்படி ஒரு தனிநபர் தொடர்ந்த வழக்கில், ரூல் கர்வ் (நீர்நிறுத்தக் கட்டுப்பாடு) விதியைக் கடைபிடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மழை அளவு, பருவக் காலம், நீர்வரத்து போன்றவற்றைக் கணக்கிட்டு ஒவ்வொரு தேதியிலும் இவ்வளவு நீர்மட்டம்தான் இருக்க வேண்டும் என்று ஒரு பட்டியலையும் வழங்கியது உச்ச நீதிமன்றம். இதனால், போதிய நீர்வரத்து இருந்தும், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த முடியாமல் போனது. வருகிற தண்ணீரை தமிழ்நாட்டுக்கு எவ்வளவு திறக்க முடியுமோ எடுத்துவிட்டு, மீதியை உபரிநீராக வெளியேற்றியது தமிழ்நாடு நீர்வளத் துறை. இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒருவேளை, இடையிலேயே மழை நின்றுவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சினார்கள் அவர்கள். அதிமுக, பாஜக போன்ற கட்சிகளோ இப்பிரச்சினையை அரசியலாக்கின.

பொதுப்பணித் துறையின் அதிகாரபூர்வ எச்சரிக்கை

ஆயினும், ரூல் கர்வ் விதி இருப்பதால்தான் எங்களால் 142 அடி தண்ணீர் தேக்க முடியவில்லை. விதிப்படி, நவ.30-ம் தேதி அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்குவோம் என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்திருந்தார். நல்லவேளையாக பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. எனவே, அதிகாலை 3.55 மணிக்கே அணையின் நீர்மட்டம் அதன் தற்போதைய உச்சபட்ச அளவான 142 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து கேரளத்தில் முல்லையாற்றின் கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட மற்றும் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதி கடைபிடிக்கப்பட்டாலும், அதன் கீழே இருக்கும் கேரளத்துக்குச் சொந்தமான ஆசியாவிலேயே 2-வது பெரிய அணையான இடுக்கி அணையில் அந்த விதி கடைபிடிக்கப்படவில்லை. ஏற்கெனவே அந்த அணை நிரம்பியிருக்கிறது. எனவே, முல்லை பெரியாறு தண்ணீர் அந்த அணைக்குச் சென்றதும், மொத்தமாக கேரளா தண்ணீரைத் திறக்கும் என்றும், இதனால் ஏற்படுகிற விளைவுக்குத் தமிழகம் எந்தவகையிலும் பொறுப்பாகாது என்றும், ஆனாலும் கேரளம், இதை அரசியலாக்கும் என்றும் கவலைப்படுகிறார்கள் தமிழக விவசாயிகள்.

‘ஏற்கெனவே, அங்கே புதிய அணை கட்டக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டம், வாகனப் பேரணி நடத்துகிறார்கள். அதாவது, பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்கிறார்கள். எனவே, நாங்கள் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வாகனப் பேரணி நடத்த உள்ளோம்’ என்று 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் அன்வர் பாலசிங்கம் அறிவித்துள்ளார்.

x