தன் மீதான பணமோசடி புகார் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்று(நவ.29) கொச்சி அமலாக்கத் துறை அலுவலகத்துக்குச் சென்று விளக்கமளித்தார்.
கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் தங்கம் பரிவர்த்தனை தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார். விற்பனையாளருக்கும் தேவைப்படுவோருக்கும் இடையே ஏஜெண்டாகவும் இவர் செயல்பட்டு வந்துள்ளார்.
அண்மையில் நெல்லை டிஐஜியிடம், ஷர்மிளா ஒரு புகார் அளித்தார். அதில், ’5 வருடங்களுக்கு முன்னர் அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குடும்ப நண்பராகப் பழகி வந்தார் என்றும், அதன் அடிப்படையில் பெருந்தொகைக்கான தங்கத்தைப் பெற்றதாகவும், அப்படி ரூ.14 கோடி மதிப்புக்குப் பெற்ற தங்கத்தில் இதுவரை ரூ.3 கோடி மட்டுமே தந்துள்ளதாகவும், ஏனைய தொகையை வழங்காது இழுத்தடிப்பதுடன், கொலை மிரட்டல் விடுப்பதாகவும்’ புகார் அளித்தார்.
இதற்கிடையே ஷர்மிளா பரிமாற்றம் செய்த தங்கம் மற்றும் பணமோசடி புகார்கள் தொடர்பாக, கேரளாவில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் அங்கமாக விஜயபாஸ்கருக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி கொச்சி அமலாக்கத் துறை அலுவலகத்தில் சி.விஜயபாஸ்கர் இன்று ஆஜராகி விளக்கமளித்தார். ஷர்மிளாவின் புகார் மட்டுமன்றி, பெருந்தொகைக்குத் தங்கம் வாங்கப்பட்டதாகச் சொல்லப்படுவதன் பின்னணி, அதற்கான நிதி ஆதாரம் குறித்தும் விஜயபாஸ்கரிடம் அதிகாரிகள் விசாரித்ததாகத் தெரிகிறது.