தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் போலீஸார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததுடன், கடுமையான வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் செய்தனர்.
அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு சென்னையில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.66.31 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. அதுவே 2019-ம் ஆண்டில், போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.33.39 கோடி அளவுக்கே அபராதத் தொகை வசூலாகியுள்ளது. இது 2020-ல் இரு மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 ஆண்டுகளில், போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கும் அபராதத் தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் வருகின்றது. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறியதாக 2016-ல் ரூ.24.13 கோடி, 2017-ல் ரூ.25.58 கோடி, 2018-ல் ரூ.27.83 கோடி என போக்குவரத்து போலீஸார் வசூல் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது.
இதேபோல், தமிழகம் முழுதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வசூலான அபராதத் தொகை, கடந்த 2019-ல் ரூ.165.81 கோடியாக இருந்தநிலையில், 2020-ல் ரூ.218.32 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2016-ல் ரூ.101.43 கோடி, 2017-ல் ரூ.155.60 கோடி, 2018-ல் ரூ.118.18கோடி தமிழகம் முழுதும் அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டிருப்பதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.