திரைத் துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் வேண்டாம்!


திரைப்படத் துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துகளைக் கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியிருக்கிறார்.

'மாநாடு' திரைப்படம் இந்து, முஸ்லிம்கள் இடையே கலவரத்தைத் தூண்டுவதாக இருப்பதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் சிம்பு வீடுகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்றும் பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம், நேற்று மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

“பேசக்கூடாத நேரத்தில், பேசுவதைத் தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்!” என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இதுதொடர்பாக அண்ணாமலை இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “வரலாறு மற்றும் உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்குப் புறம்பான கருத்துகள் வந்தால், அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்தத் தவறும் இல்லை. சில இடத்திலே பாரதிய ஜனதா கட்சி, நம்முடைய கண்டனங்களைக் கடுமையாகப் பதிவும் செய்திருக்கிறது. திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு. அவர்கள் பார்த்த, படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சியின் சகோதர சகோதரிகள், சில நேரங்களில் பொழுதுபோக்குத் திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

கட்சியில் முக்கியப் பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும், “எப்பொழுது எதற்காகப் பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில், பேசுவதைத் தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்! நமது இலக்கு, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாகச் செயல்படுங்கள்!

எனவே, திரைப்படத் துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துகளைக் கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

x