தேர்தல் நேரத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பு, மாநில உரிமை பேசிய கட்சிகள் எல்லாம் இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சியோ தொடர்ந்து சீறுகிறது. திரிபுராவில் நடந்த வன்முறைக்குக்கூட ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தி கவனத்தை ஈர்க்கிறது விசிக. இந்தச் சூழலில் அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசுவிடம் பேசினோம்.
திரிபுரா பிரச்சினை பற்றி இங்கே அதிகம் பேசப்படுவதேயில்லை. அங்கே என்ன நடக்கிறது? எதற்காக ஆர்ப்பாட்டம்?
பாகிஸ்தானைக் காட்டி இங்கே அரசியல் செய்வதைப்போல, அங்கே வங்கதேசப் பிரச்சினையைச் சொல்லி இந்து அமைப்புகள் பிரம்மாண்டப் பேரணி நடத்தியிருக்கின்றன. அப்போது இஸ்லாமியர்களும், அவர்களது கடை, வீடுகளும், மசூதிகளும் சூறையாடப்பட்டிருக்கின்றன. கூடவே, இடதுசாரி கட்சிகளின் அலுவலகங்களும் தகர்க்கப்பட்டிருக்கின்றன. அந்த வன்முறை பற்றி பேசியதற்காகவே நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்ட’த்தின்(யுஏபிஏ)கீழ் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.
அங்குள்ள பத்திரிகையாளர்கள், டெல்லியிலிருந்து சென்ற உண்மை அறியும் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், சமூக வலைதளங்களில் எழுதிய நடுநிலையாளர்கள் என அனைவர் மீதும் வழக்கு. எப்போது வேண்டுமானாலும் நாம் கைது செய்யப்படலாம் என்கிற அச்சத்திலேயே அவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். வடமாநிலங்களில் தங்கள் பொய்யெல்லாம் அம்பலப்பட்டு செல்வாக்கு சரிந்துவருவதால், வடகிழக்கு மாநிலங்களை ஒட்டுமொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக இப்படி மதரீதியான பிரச்சினைகளை திட்டமிட்டு ஏற்படுத்துகிறார்கள்.
இதுவெறுமனே திரிபுரா பிரச்சினை மட்டும் கிடையாது. இந்த நாட்டை இந்துத்துவ நாடாக மாற்றுவதற்காக, சட்டத்தை மதிக்காமல் எவ்வளவு மோசமான காரியங்களில் பாஜக ஈடுபடும் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு. இன்னொருபக்கம், பீமாகோரேகான் வழக்கில் 2016-ம் ஆண்டிலிருந்து இன்று வரையில் தொடர்ந்து அறிவுஜீவிகளையும், ஜனநாயகவாதிகளையும் கைது செய்துகொண்டிருக்கிறார்கள். அம்பேத்கரின் உறவினரும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தம்பி மிலிந்த் டெல்டும்டேவையும் தேடுவதாகச் சொன்ன அவர்கள், இப்போது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் சேர்த்து அவரையும் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.
பாஜக பின்னிருந்து நடத்திய அதிமுக ஆட்சியில், தமிழ்நாட்டிலேயே 207 பேர் மீது உபா சட்டம் போடப்பட்டிருக்கிறது. 2019-ம் ஆண்டில் மட்டும் மணிப்பூரில் 306 பேர், ஜம்மு காஷ்மீரில் 255 பேர், ஜார்கண்டில் 105 பேர், அசாமில் 87 பேர் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ததாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பாராளுமன்றத்திலேயே சொன்னார்.
இப்படியே போனால், தங்கள் ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ கொள்கையை எதிர்க்கும் எல்லோரையும் இந்த சர்வாதிகாரிகள் உபா சட்டத்தில் உள்ளே தள்ளிவிடுவார்கள் என்பதால்தான், இந்தப் போராட்டத்தை நடத்தினோம். சனாதன எதிர்ப்பு, ஜனநாயகப் பாதுகாப்புக்காக விசிக தொடர்ந்து களமாடும்.
மத்திய அரசு சர்வாதிகாரப்போக்கில் செயல்படுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், இப்போது வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறுதல், பெட்ரோல் விலையைக் குறைத்தல் என்று சில விஷயங்களில் அவர்கள் இறங்கிவருவது போல் தெரிகிறதே?
சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்து பார்த்தீர்கள் என்றால், ஆர்எஸ்எஸ்காரர்கள் எப்போதுமே மக்கள் எதிர்ப்பைப் பார்த்துவிட்டுப் பதுங்குவார்கள். ஆனால், பின்னொரு நாள் வாய்ப்புக் கிடைக்கும்போது பாய்வார்கள். அதுதான் இப்போதும் நடக்கிறது. இவர்களுக்கு மக்கள் நலனோ, அவர்களது கருத்தோ ஒரு பொருட்டேயல்ல. மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து இன்னும் தீவிரமாக தங்கள் சித்தாந்தப் பாதையில் நடைபோடுவதற்காகத்தான் இப்படிப் பதுங்குகிறார்கள்.
திரிபுரா ஆர்ப்பாட்டத்தில் விசிகவுடன் இடதுசாரிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் பங்கேற்றன. கூட்டணிக் கட்சியான திமுக பங்கேற்கவில்லையே, ஏன்?
திரிபுராவில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களும், கடை, வீடுகளும் தாக்கப்பட்டிருக்கின்றன. இடதுசாரிகளின் அலுவலகங்களும் சூறையாடப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் என்கிற முறையில் அவர்களை மட்டும் அழைத்தோம். திமுகவை அழைக்காததற்கு அதுதான் காரணமே தவிர, வேறெந்த உள்நோக்கமும் இல்லை.
ஆனால், இது முதல் நிகழ்வு அல்ல. ஏற்கெனவே பல போராட்டங்களை சிறுத்தைகளும், இடதுசாரிகளும் மட்டும் இணைந்து நடத்தியிருக்கிறீர்கள். திமுக கூட்டணிக்குள்ளேயே ஒரு மக்கள் நலக்கூட்டணி இருக்கிறதா?
யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, யாரெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்கள் பக்கம் நிற்பவர்கள் எல்லோருமே இடதுசாரிகள்தான். அந்த அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் இயக்கமும் ஓர் இடதுசாரி இயக்கம்தான். எனவே, மக்கள் பிரச்சினைகளில் நாங்கள் சேர்ந்து நிற்கிறோம். அதற்கான தேவையும் இருக்கிறது. இதில் அரசியலோ, உள் கூட்டணியோ எதுவும் இல்லை.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. எத்தனை மேயர் சீட்டுகள் விசிகவுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?
கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பட்டியலின மக்களும் இம்முறை ஒரு மேயர் பதவியையாவது விடுதலைச் சிறுத்தைகள் கைப்பற்றிவிட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். கூடவே, சில நகராட்சித் தலைவர் பதவிகளிலும் சிறுத்தைகள் அமர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
மொத்தம் 21 மாநகராட்சிகளும், 150 நகராட்சிகளும் இருக்கின்றன என்பதால், விசிகவினர் அந்தப் பதவியை விரும்புவதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, இதுகுறித்து எங்கள் தலைவரிடம் வலியுறுத்துவோம். சமூகநீதி அடிப்படையில் தமிழக முதல்வரும், கூட்டணி தலைவருமான ஸ்டாலின் அவர்களும் அதை நடைமுறைப்படுத்துவார் என்றே நாங்கள் நம்புகிறோம்.
முல்லை பெரியாறு பிரச்சினையில் தேனி மாவட்டத்துக்கே சென்று தீவிரமாகப் போராடிய மதிமுகவும், விசிகவும் இப்போது அமைதிகாக்கக் காரணம் என்ன? கூட்டணி தர்மமா?
முல்லை பெரியாறு பிரச்சினையில் திமுக அரசு சரியான போக்கில் செல்கிறது. எனவே, இந்த அரசின் அணுகுமுறைக்கு துணை நிற்கிறோம். எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டின் உரிமை காவு கொடுக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அப்படி ஏதாவது நடந்தால், போராட்டம் நடத்தவும் விசிக தயங்காது.
ஏழைகள், குறிப்பாகப் பட்டியலின மக்கள் அதிகமாக பயன்படுத்துகிற ரேஷன் அரிசியின் தரம் மோசமாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் வருகின்றன. தரமான அரிசியைப் பொட்டலமாக வழங்குவோம் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னாயிற்று?
மகளிருக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை உள்ளிட்ட பல கோரிக்கைகளை திமுக அரசு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறது. வெறும் ரேஷன் அரிசி மட்டுமல்ல, 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். தரமான அரிசியுடன், 7 தமிழர் விடுதலைக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம்.
மருத்துவர் ராமதாசுக்கு அம்பேத்கர் விருது வழங்கிய விசிக, இப்போது அவரது அரசியல் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறது?
கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரடியாகவும், காணொலி காட்சி வாயிலாகவும் அவர் பேசுவதைப் பார்க்கும்போது உண்மையிலேயே பரிதாபமாக இருக்கிறது. மிகுந்த வெறுப்புடனும், விரக்தியுடனும் பேசுகிறார். ஆர்எஸ்எஸ் சிநேகம் காரணமாக, அந்தச் சித்தாந்தத்தில் அவர் நடைபோட்டு சாதி, மதவெறிக்குத் துணை போனார். இப்போது அவரது கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களுமே பாஜகவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். கட்சி அவரது கட்டுப்பாட்டிலேயே இல்லை.
ஒரு காலத்தில் உண்மையிலேயே சமூக நீதியின்பால் அவருக்கு நம்பிக்கை இருந்தது. அதற்காகப் போராடினார். பரூக் அப்துல்லா, சரத் யாதவ், பூலான்தேவி என்று இந்திய துணைக் கண்டம் முழுக்க பரந்துபட்ட அரசியல் தொடர்பை வைத்திருந்தார். இன்றோ அந்தக் கட்சியை குறிப்பிட்ட மாவட்ட, வட்டார, சாதிக்கான கட்சியாக அவரே சுருக்கிவிட்டார். தலைமையே தவறான பாதையில் நடைபோடுவதால், அக்கட்சியில் உள்ள சமூக நீதியில் அக்கறைகொண்டோரெல்லாம் கவலையில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் விசிகவில் வந்துசேர வேண்டும் என்று அன்புடன் வரவேற்கிறேன்.
'ஜெய் பீம்' படப் பிரச்சினையில் தமிழ் தேசியம் பேசும் பலர் பாமகவுக்கு ஆதரவான கருத்தையே சொல்கிறார்களே..?
தங்கள் சாதிவெறியை மறைத்துக்கொள்வதற்காக, தமிழ் தேசியம் பேசுபவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டவர்களின் முகமூடி இந்தப் பிரச்சினையின்போது கிழிந்திருக்கிறது. சீமானின் குரலும், இயக்குநர் கவுதமனின் குரலும் பகிரங்கமாக சாதிவெறிக்கு ஆதரவாக வெளிப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பெ.மணியரசன் போன்றோர் தமிழ் இந்து என்கிற இல்லாத அடையாளத்தைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஒருவன் தன்னை இந்து என்று பெருமிதமாகச் சொல்கிறான் என்றாலே, அவன் சனாதனத்தை, வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொண்டான் என்றுதானே அர்த்தம்? எப்படி ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஊடுருவிய ஆர்எஸ்எஸ்காரர்கள் அந்தக் கட்சியையே அழித்துக்கொண்டிருக்கிறார்களோ, அப்படி இப்போது சாதியவாதிகளும், மதவாதிகளும் தமிழ் தேசியத்துக்குள் புகுந்து அந்தக் கோட்பாட்டையே அழிக்கப் பார்க்கிறார்கள். இந்தப் போலித் தமிழ் தேசியர்களிடம் இருந்து தமிழ் தேசியத்தைக் காக்கிற பொறுப்பை விசிக முன்னின்று செய்யும்.