சென்னையை நனையச் செய்யும் நவம்பர் மாதம்!


நவம்பர் மாதத்தை மழை மாதமாக அடையாளப்படுத்தலாம் என்கிற அளவுக்கு சென்னையில் இம்மாதத்தில் மழை மிக அதிகமாகப் பெய்துவருகிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் 1,000 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்திருக்கிறது.

வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தைத் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் சந்தித்திருக்கின்றன. சென்னை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுடன் டெல்டா மாவட்டங்களும் அதிகமாகவே மழையை எதிர்கொண்டன. தற்போது சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக, கடந்த 100 ஆண்டுகளில் 4-வது முறையாக 1,000 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவைச் சென்னை சந்திக்கிறது. அதேபோல, கடந்த 100 ஆண்டுகளில் 3-வது முறையாக நவம்பர் மாதத்தில் மட்டும் 1,000 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையைச் சென்னை எதிர்கொள்கிறது.

இன்று (நவ.27) இரவு 7.30 மணிவரை 1,003 மில்லிமீட்டர் மழையைச் சென்னை சந்தித்திருக்கிறது. இதற்கு முன்பு, சென்னையில் 1918 நவம்பரில் 1,088 மில்லிமீட்டர் மழையும், 2005 அக்டோபரில் 1,078 மில்லிமீட்டர் மழையும், 2015 நவம்பரில் 1049 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியிருக்கிறது.

இதற்கிடையே, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்திருந்ததுபோலவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடும் மழை பெய்துவருகிறது. நள்ளிரவு முதல் கனமழை பெய்யும் என்று அவர் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, செங்கல்பட்டு மாவட்டத்தின் ஏரிகள் நிரம்பியதால் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இந்நிலையில், இன்று இரவு மழையின் தீவிரம் குறையுமா என்று சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்ட மக்கள் பரிதவிப்புடன் காத்திருக்கிறார்கள்.

x