தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் 100 அடி நீளமுள்ள விளம்பர பிளக்ஸ் போர்டு திடீரென சரிந்து விழுந்தது. இதில் பொதுமக்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலைய கட்டிடத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில், சுமார் 100 அடி நீளமுள்ள நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பான விழிப்புணர்வு விளம்பர பிளக்ஸ் போர்டு, பொதுமக்கள் அமரும் இருக்கையின் முகப்பில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை (ஜூன் 10) வீசிய காற்றில், 100 அடி நீளம் உள்ள பிளக்ஸ் போர்டு திடீரென கழன்று கீழே விழுந்தது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால், பிளக்ஸ் போர்டு கீழே விழும்போது யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி ஊழியர்கள் பிளக்ஸை அகற்றி சென்றனர். இதில் பொதுமக்களுக்கு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படதால் நகராட்சி அலுலர்கள் நிம்மதி அடைந்தனர்.
இது குறித்து பயணிகள் கூறியதாவது: ”பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அதிராம்பட்டினம் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் பயணிகள் அமரும் இடத்தின் முகப்பில் இரும்பு கம்பிகளில் பொருத்தப்பட்ட சுமார் 100 அடி நீளம் உள்ள நகராட்சி விளம்பரம் கொண்ட பிளக்ஸ் இருந்தது. இது துருபிடித்து தொங்கிக் கொண்டு இருந்தது. நகராட்சி நிர்வாகத்தினர் இதை கண்டுக்கொண்டுவில்லை.
சிறிய காற்று அடித்ததில் கீழே விழுந்துள்ளது. இரும்பு கம்பியில் பொருத்தப்பட்ட பிளக்ஸ் யாரும் மீது விழவில்லை. இதனால் காயம், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதே போல் பேருந்து நிலையத்தில் உள்ள மற்ற விளம்பர பிளக்ஸ் பேனர்களையும் தரமாக உள்ளதாக என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றனர்.