பகுஜன் சமாஜ் கட்சியின் சுமார் நான்கில் 3 பங்கு எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்ன வியூகம் எடுப்பது என்று குழம்பிப் போயிருக்கிறார் கட்சித் தலைவரான மாயாவதி.
உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக 4 முறை பதவி வகித்த மாயாவதி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தயாரிப்பில் சுணங்கியிருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் புலம்பி வருகின்றனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 19 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியினர் வென்றனர். ஆனால் மாயாவதியுடனான கருத்து வேற்றுமையில், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மற்றும் பாஜக பக்கம் பலரும் தாவினர். மேலும் இருவர் கட்சியிலிருந்து விலகி நின்று, எங்கே புகலிடம் என்று அலைபாய்ந்து கொண்டிருக்கின்றனர்.
இப்படி 15 எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறி இருக்கின்றனர். மிச்சமிருக்கும் சொச்ச எம்எல்ஏக்கள் வரும் தேர்தல் வரைக்கும் தாங்குவார்களா என்பது பகுஜன் சமாஜ் தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது. எம்எல்ஏக்களுக்கு அப்பால் கட்சியின் அடுத்தகட்ட தலைவர்கள் பலரும்கூட பாஜக மற்றும் சமாஜ்வாதி முகாம்களுக்குத் தாவியுள்ளனர்.
அனல் பரத்தும் அரசியலுக்கு சொந்தக்காரரான மாயாவதி, பாஜக ஆட்சி அமைத்ததிலிருந்தே அடக்கி வாசிக்கிறார். மத்திய மாநில அரசுகளின் வழக்குகளுக்கு மாயாவதி பயந்திருக்கிறார் என்று கட்சியினரே விமர்சிக்க ஆரம்பித்தனர். கட்சியை கட்டிக்காக்க வீதிகளில் களமிறங்காது, அறிக்கை அரசியல் நடத்தியதும் கட்சி நலிய காரணமாயிற்று. 65 வயதாகும் மாயாவதியின் உடல்நிலை, முன்பு போல ஆக்டிவ் அரசியலுக்கு உடன்படவில்லை என்று சிலர் காரணம் கூறுகின்றனர். அதற்காக எம்எல்ஏக்களை தொடர்ந்து இழக்கும் அளவுக்கா, மாயாவதியின் அரசியல் அனுபவம் தேய்ந்து விட்டது என்று அதிருப்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆளும் பாஜகவின் யோகி ஆதித்யநாத் அசுர பலத்தோடு, அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்கிறார். ஆட்சியின் சாதனைகள் ஒருபக்கம், புதிய திட்டங்கள் மறுபக்கம் என புயலாகச் சுழன்று வருகிறார். அடுத்தபடியாக சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் கட்சிக்கு விசுவாசத் தொண்டர்களுக்கு அப்பால், ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலையும் எழுந்திருக்கிறது. பகுஜன் சமாஜைவிட குறைவான இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சிக்கு, பிரியங்கா காந்தியின் களமாடலில் புது ரத்தம் பாய்ந்திருக்கிறது. பாஜகவை தோற்கடிக்கும் வியூகத்துடன், கூட்டணிக்காக அரவிந்த் கேஜ்ரிவாலின் அணுக்கர்கள் அகிலேஷ் யாதவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இத்தனைக்கும் மத்தியில், கட்சி கலகலத்திருப்பதை கண்டுகொள்ளாதிருக்கிறார் மாயாவதி. அவருக்கான பிரத்யேக ஓட்டு வங்கி உத்தர பிரதேசத்தில் உண்டு. மேலும் உதிரிக் கட்சிகளிடம் கூட்டணி வைத்தால், பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை அறுவடை செய்துவிடலாம் என்ற 2-ம் கட்டத் தலைவர்களின் யோசனையை 6 மாதங்களுக்கும் மேலாக பரிசீலித்து வருகிறார் மாயாவதி. இவர் இன்னும் வேகமெடுக்க வேண்டும் என்பதே, பகுஜன் சமாஜ் கட்சியினரின் வேண்டுதலாக இருக்கிறது.