ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் காண்ட்ராக்டர்கள் யார்?


தமிழகத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.4,794 கோடியில் மிச்சமிருப்பது வெறும் ரூ.15 கோடிதான் என்று தகவல் தந்துள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரகம், யார் ஒப்பந்ததாரர் உள்ளிட்ட விவரங்களைத் தராமல் சமாளித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவந்தன. அண்மையில் சென்னை வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினும், இந்தக் குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்தியதுடன், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் அறிவித்தார்.

இதற்கிடையே, சென்னையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆ.காசிமாயன், ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த பல்வேறு சந்தேகங்களை தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்விகளாக நகராட்சிகளின் நிர்வாக இயக்குநருக்கு அனுப்பியிருந்தார். 15.11.2021 அன்று அவர் எழுதிய கடிதத்துக்கு, 24.11.2021 அன்று பதில் கொடுக்கப்பட்டு, அது நேற்றுதான் அவரை வந்தடைந்திருக்கிறது. அதுவும் முழுமையான தகவல்கள் இல்லை. இருப்பினும் சில கேள்விகளுக்குத் தரப்பட்ட பதில்கள் விவரம் வருமாறு...

தமிழ்நாட்டில் உள்ள 14 மாநகராட்சிகளில் எந்தெந்த மாநகராட்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டது?

கோவை, ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் ஆகிய 10 மாநகராட்சிகளுக்கு மட்டுமே ஸ்மார்ட் சிட்டியின்கீழ் நிதி ஒதுக்கப்பட்டதாக பதில் தரப்பட்டிருக்கிறது. பட்டியலில் சென்னை மாநகராட்சி இல்லை.

எந்தெந்த மாநகராட்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது, எவ்வளவு செலவு செய்யப்பட்டது?

மிக அதிகமாக கோவை மாநகராட்சியில்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பணி செய்யப்பட்டுள்ளது. கோவைக்கு மட்டும் செலவிடப்பட்ட தொகை 772 கோடி. தவிர, ஈரோடு 379 கோடி, மதுரை 579 கோடி, சேலம் 479 கோடி, தஞ்சாவூர் 368 கோடி, தூத்துக்குடி 386 கோடி, திருச்சி 386 கோடி, திருநெல்வேலி 373.81 கோடி, திருப்பூர் 379 கோடி, வேலூர் 373.81 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம், 10 மாநகராட்சிக்கும் சேர்த்து 4,793.62 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு நிதி 2,307.63 கோடி, மாநில அரசு நிதி 2,486 கோடி.

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை டெண்டர் எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள், அவர்கள் டெண்டர் எடுத்துள்ள தொகையின் மதிப்பு?

இதுகுறித்து 10 மாநகராட்சி ஆணையருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். பதில் வந்ததும் தருகிறோம்.

உங்களது அலுவலகத்துக்கு (நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் அலுவலகம்) வந்த புகார் மனுக்களின் எண்ணிக்கை விவரம்?

புகார் குறித்த தகவல்களை குறிப்பிட்டுக் கோரும்பட்சத்தில் தகவல் தரப்படும்.

அப்படி வந்த புகார்கள் மீது நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் அவர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம்?

புகார் குறித்த தகவல்களை குறிப்பிட்டுக் கோரும் பட்சத்தில் தகவல் வழங்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி எவ்வளவு? அந்தந்த மாநகராட்சி பொதுநிதியில் இருந்து செலவிடப்பட்ட தொகை எவ்வளவு?

10 மாநகராட்சிக்கும் சேர்த்து 4,793.62 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு நிதி 2,307.63 கோடி, மாநில அரசு நிதி 2,486 கோடி. மாநகராட்சியின் நிதி எவ்வளவு என்று கேட்டு அந்தந்த மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்கள்.

x