'ஜெய் பீம்' படத்தைப் பார்த்த மதுரைக்காரர்கள் பலருக்கும் மணிக்குறவன் நினைவு வந்திருக்கும். யாரிந்த மணிக்குறவன்? தென் மாவட்டக் கிராமக் கோயில் திருவிழாக்களில் நள்ளிரவைத் தாண்டியதும் தூக்கத்தில் இருந்து பெருசுகளைத் தட்டி எழுப்புவதற்காக, கரகாட்டக்காரர்களும் ராஜாராணி ஆட்டக்காரர்களும் சொல்கிற கதை இது. தூக்கம் கலைந்து, உடல் புல்லரிக்கக் கேட்பார்கள் பெரியவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் மணிக்குறவன் கதை, ஒரு புரட்சிக்காரனின் கதை.
மணிகுறவன் நாயகனான கதை
மதுரை திடீர் நகரைச் சேர்ந்த மணிக்குறவன், அடிதடிக்குப் பேர் போனவர். குஸ்திச் சண்டையில் கில்லாடி. பெண்களைக் கவர்ந்த ஆணழகர். யாருக்கும் அஞ்சாத வீரர். குறவன் என்ற உண்மையைச் சொன்னால், எங்கே திருட்டுப் பட்டம் கட்டிவிடுவார்களோ என்று அம்மக்கள் பயந்த காலத்திலேயே, தன்னுடைய பெயரை மணிக்குறவன் என்று கம்பீரமாகச் சொல்லிக்கொண்டவர். ஒருமுறை அவர் வளர்த்த பன்றியொன்றை அடித்துத் தூக்கியது, வேகமாக வந்த டிவிஎஸ் பஸ். அப்போது அரசுப் பேருந்துப் போக்குவரத்து எல்லாம் கிடையாது என்பதால், டிவிஎஸ் பஸ் என்றாலே மக்கள் ரொம்ப மரியாதையாகப் பார்த்த காலம் அது. நியாயம் கேட்டுப் போனார் மணிக்குறவன். “பன்னி என்ன பன்னி, மனுஷப் பயலா இருந்தாலும் வண்டியைப் பார்க்காம வந்தா சாகத்தான்டா வேணும்” என்று நக்கலாகச் சொன்னார் ஓட்டுநர். மணிக்குறவன் பேசவில்லை. அவரது அரிவாள் பேசியது. வெட்டிச் சாய்த்தார் ஓட்டுநரை. மதுரையே பரபரப்புக்குள்ளானது.
அந்தக் காலத்தில் டிவிஎஸ் ஊழியர் என்றால், அரசாங்க ஊழியரைவிட ஒசத்தி. அதுவும் அந்த ஓட்டுநர் கொஞ்சம் வில்லங்கப் பேர்வழி. அப்படிப்பட்ட ஒருவரை நடு ரோட்டில் வெட்டிச் சாய்த்ததால், ஊரே மணிக்குறவனை நாயகனாகப் பேச ஆரம்பித்தது. காவல் நிலையங்களோ அவரைச் சண்டியர் என்றன. திருமணமான மணிக்குறவனுக்குக் காதலிகளின் எண்ணிக்கை கூடியது. கடைசியில், அந்தப் பெண் விவகாரமே அவருக்கு எமனாக மாறியது. அவரது சொந்தக்காரர்களே அவரைப் போட்டுத் தள்ளிவிட்டார்கள். இறந்தபோது, மணிக்குறவனுக்கு வெறும் 22 வயதுதான்.
கதை அத்தோடு முடியவில்லை. மணிக்குறவனின் தாய் பூரணக்குறத்தி, ஒரு சபதம் போட்டார். “என் மகனைக் கொன்றவர்களைப் பழிக்குப் பழியாக வெட்டிக்கூறு போடுபவர்களுக்குப் பரிசாக என் மருமகளையே (சுமார் 19 வயது) தருகிறேன். எந்தச் சாதி ஆம்பளையா இருந்தாலும் பரவாயில்ல” என்று அறிவித்தார். மணிக்குறவனின் நண்பனும், மறவர் சாதியைச் சேர்ந்தவருமான பருத்திவீரன் அந்தச் சபதத்தை நிறைவேற்றி, மணிக்குறவனின் மனைவி அழகம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இந்தக் கதையை ஹீரோயிஸம் சேர்த்து, ராகத்தோடு பாடுவார்கள் கிராமியக் கலைஞர்கள். கூடவே, "பெற்ற மக்களைப் போல நினைச்சு சபை மன்னிக்கணும் பிழை பொறுத்து..." என்று டிஸ்க்ளைமரும் போட்டுவிடுவார்கள்.
அரசியல் தலைவர்கள் மரியாதை
'ஜெய் பீம்' படம் மதுரை மக்களுக்கு மணிக்குறவனை நினைவுபடுத்தியதைப் போல, அரசியல் தலைவர்களுக்கும் ஞாபகப்படுத்தியிருக்கும்போல. இந்த ஆண்டு அவரது நினைவு நாள் (நவ.14) விழாவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் கே.கே.செல்வக்குமார், வன வேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன், விடுதலை வேங்கைகள் கட்சி அரி கிருஷ்ணன் உட்பட பல தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார்கள்.
அகமுடையாருக்கு மருது பாண்டியர், யாதவருக்கு வீரன் அழகுமுத்துக்கோன், முத்தரையருக்கு மன்னர் பெரும்பிடுகு, மறவருக்கு பூலித்தேவன், தேவேந்திரருக்கு வீரன் சுந்தரலிங்கம் போல குறவர் சமூகத்தினர் இந்த மணிக்குறவனை ‘மன்னர் மணிக்குறவர்’ என்றே உருவகப்படுத்தியிருக்கிறார்கள். விழா மேடையில், மணிக்குறவன் குதிரை மீது வாளுடன் அமர்ந்திருப்பது போன்ற பிரம்மாண்ட சித்திரம் வைக்கப்பட்டிருந்தது. ஒடுக்கப்பட்டோரில் ஒடுக்கப்பட்டோரான குறவர்களுக்கென, இப்போது இரண்டு மூன்று கட்சிகளும் உருவாகிவிட்டன.
நினைவிடத்தில்...
மணிக்குறவனின் நினைவிடம் இருக்கிற தத்தனேரி சுடுகாட்டுக்குச் சென்றோம். 24 மணி நேரமும் இடைவிடாமல் பிணம் எரிந்துகொண்டே இருக்கும் சுடுகாடு அது. நாம் போனபோதும் ஏழெட்டு பிணங்கள் எரிந்துகொண்டிருந்தன. புகையைக் கடந்து போனால், கல்லறைகள் நிறைந்த இடுகாடு. அங்கே, சுமார் 10 சென்ட் நிலம் மட்டும் சுத்தப்படுத்தப்பட்டு மைதானம் போல காட்சியளித்தது. அதன் நடுவில் இருந்தது மணிக்குறவனின் நினைவிடம். அவரைப் புதைத்த இடத்திலேயே அவருக்கு மார்பளவு சிலை வைத்து, அதன் மீது சின்னதாக ஒரு மண்டபமும் கட்டியிருக்கிறார்கள். சிலைக்குப் பின்னால் உள்ள சுவரில் மணிக்குறவனின் கம்பீரமான கறுப்பு வெள்ளைப் புகைப்படம் தொங்கியது. அதை கம்பிக்கதவின் இடுக்கின் வழியாகப் புகைப்படம் எடுத்தபோது, ஒருவர் அருகில் வந்து நின்றார். சட்டென்று திரும்பிப் பார்த்தால், அந்த மணிக்குறவனே உயிருடன் நிற்பது போன்ற உருவ ஒற்றுமை. அதே 22 வயதுதான் இந்த நபருக்கும்.
“நீங்க யார்?” என்று நம்மை விசாரித்த அந்த இளைஞரின் பெயர் பிரபாகரன். மணிக்குறவனின் வம்சாவளி. ரொம்ப வசதியாகப் போய்விட்டது. நாம் கேட்ட கிராமியக் கதை கொஞ்சம் வில்லங்கமானது என்பதால், அந்த சமூகத்தினரிடமே மணிக்குறவனின் வரலாற்றைக் கேட்கலாமே என்று நினைத்த நேரத்தில், இவரது எதிர்பாராத சந்திப்பு நேர்ந்தது.
“வீடு பக்கத்தில்தான் சார் இருக்குது. வருசந்தோறும் மணிக்குறவனின் குருபூஜையை நடத்துவது எங்க பெரியப்பா (மணிக்குறவனின் மனைவிக்கு உடன்பிறந்த சகோதரர்) பொன்.பூப்பாண்டிதான்” என்று அறிமுகப்படுத்தியவர், “8 மாதத்துக்கு முன்பே பூப்பாண்டி பெரியப்பா இறந்துட்டார். இதோ பக்கத்தில்தான் அடக்கம் செய்திருக்கிறோம்” என்றார். கூடவே, தன் பெரியம்மாவான ஜெயந்தி பூப்பாண்டியையும் அறிமுகப்படுத்திவைத்தார்.
மன்னர் மணிக்குறவர்
"மணிக்குறவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது தாய்மாமனான கருத்தான்வேடுவரின் வம்சாவளிகள்தான் நாங்கள். பருத்திவீரனை மணந்த மணிக்குறவனின் மனைவிக்கு பி.டி.ராஜன், பவர் சிங் என்று 2 பிள்ளைகள். அவர்களும் மதுரையில் பிரபலமான ரவுடிகளாகத் திகழ்ந்தார்கள். ராஜன் விபத்தில் இறந்துவிட, 60 வயதைக் கடந்த பவர் சிங் இப்போதும் இருக்கிறார்" என்றார் ஜெயந்தி.
மேலும் சில விவரங்களைச் சொன்னவர்கள், “ஒவ்வொரு சாதிக்கும் ஒரு மன்னர் இருப்பதுபோல, எங்களது சாதிக்கு இவரைத்தான் மன்னராகக் கருதுகிறோம். எனவே, அதற்கேற்றவாறு அவரது வரலாற்றை இப்போது திருத்தி எழுதியிருக்கிறோம். அதைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று ஒரு பிளக்ஸ் போர்டைக் காட்டினார்கள். அதன் சுருக்கம் இது.
‘விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டியைச் சேர்ந்த சீமைச்சாமியும் திருநெல்வேலி பூரணக்குறத்தியும், மதுரை திடீர் நகரில் வாழ்ந்தபோது அத்தம்பதியினருக்கு 1931-ல் மகனாகப் பிறந்தவர் மணிக்குறவர். ஒரு காலத்தில் குறிஞ்சி நிலத்தை ஆண்ட சமூகம், பிற்காலத்தில் ஆதிக்க சாதிகளால் ஒடுக்கப்பட்டிருந்த நேரத்தில் மதுரையில் நடந்த ஒரு குஸ்திப் போட்டியில் வெறும் பதினாறே வயதான மணிக்குறவர் முதல் பரிசையும், மதுரையின் குஸ்தி மன்னன் பட்டத்தையும் பெற்றார். கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்கு மருத்துவமனைக்குச் செல்வதற்காக டிவிஎஸ் பஸ்ஸை நிறுத்துமாறு கை காட்டியும் நிறுத்தாமல் போனார் டிரைவர். பஸ்ஸை விரட்டிப் பிடித்த மணிக்குறவர், டிரைவரைத் தாக்கினார். 7 ஆண்டு ஜெயில் தண்டனை. அந்தக் காலத்திலேயே நீதிமன்றங்களில் போராடி, மகனை ஜாமீனில் எடுத்தார் தாய் பூரணக்குறத்தி.
இதன்பிறகு ஆதிக்க சாதியைச் சேர்ந்த குஸ்தி வீரர்களுடன் நட்பு ஏற்பட்டது. அவர்களுடன் சேர்ந்து சுற்றுவட்டாரத்தில், பல பஞ்சாயத்துகளைத் தீர்த்துவைத்தார், மணிக்குறவர். கடைசியில் தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அடைவதற்காக நடத்தப்பட்ட இளவட்டக்கல் போட்டியில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மணிக்குறவர் கொல்லப்பட்டார். வெகுண்டெழுந்த தாய் பூரணக்குறத்தி, மகனின் நண்பர்கள் மூலம் கொன்றவர்களைப் பழிதீர்த்து, மணிக்குறவனின் விதவை மனைவியான தன்னுடைய மருமகளை, பருத்திவீரன் என்ற மறவர் சாதி நண்பருக்கு மறுமணம் செய்துவைத்தார்’ என்றிருந்தது அந்த எழுதப்பட்ட வரலாற்றில்.
திரைவடிவம் முழுமை பெறுமா?
மணிக்குறவர் குருபூஜை விழாவுக்கு அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோரை அழைத்துவந்தவரும், இன்றைய விழாக்குழு தலைவருமான பொன்.ரவியிடம் கேட்டபோது, "அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் வீரவாழ்வு வாழ்ந்தவர் மணிக்குறவன். அந்தக் காலத்திலேயே குற்றப்பரம்பரைச் சட்டத்துக்கு எதிராக வீர முழக்கமிட்டவர். அவர் வீரமரணடைந்த நாளை, தமிழ்நாடு முழுக்க சிதறிக்கிடந்த எங்கள் சாதி சனங்களை ஒன்றிணைக்கும் விழாவாக ஆண்டுதோறும் நடத்திவருகிறோம். இப்போது எங்கள் சாதியினரிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. மராட்டிய மன்னர்களுடன் தமிழகத்துக்கு வந்த நரிக்காரர் சாதிக்கு, எங்களது தமிழ்ப் பெயரான குறவர் பெயரைச் சூட்டி எம்ஜிஆர் வரலாற்று மோசடி செய்துவிட்டார் என்ற வருத்தம் எங்கள் சமூகத்தினருக்கு இருக்கிறது. இந்தப் பெயரை மாற்றுவதற்குத் துணை நிற்போம் என்று சீமானும், எங்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு உதவுவதாக திமுக அமைச்சர்களும் உறுதி கொடுத்திருக்கிறார்கள்" என்றார்.
'ஜெய் பீம்' படம் குறித்து குறவர் சங்க நிர்வாகி சசிக்குமாரிடம் கேட்டபோது, "அந்தப் படம் எங்கள் சமூகத்துக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இதேபோல ‘பருத்திவீரன்’ படத்திலும் மணிக்குறவனின் கதை முழுமையாகக் காட்டப்படவில்லை. ‘மதுரை மணிக்குறவன்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குவதாக இயக்குநர் ராஜரிஷி அறிவித்தார். இசைஞானி இளையராஜா இசையில் பாடல்களும்கூட வெளியிடப்பட்டன. ஆனால், மூன்றாண்டாகியும் அந்தப் படம் வெளியாகவில்லை. அதுவாவது உண்மையான வரலாற்றைப் பதிவு செய்யுமா என்று ஆவலோடு காத்திருக்கிறோம்" என்றார்.
நேர்த்தியான திரைக்கதையுடன் படமாக்கியிருந்தால், ‘சீவலப்பேரி பாண்டி’, ‘கரிமேடு கருவாயன்’, ‘மலையூர் மம்பட்டியான்’, ‘அசுரன்’, ‘ஜெய் பீம்’ வரிசையில் இந்தப் படமும் பேசப்படக்கூடும். காத்திருப்போம்!