கரோனா அச்சத்தில் தெலுங்கு முதல்வர்கள்?


திருமண விழாவில் தெலுங்கு முதல்வர்கள்

ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர்கள் இருவரும், கரோனா தொற்று அச்சத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

தெலங்கானா சபாநாயகர் ஸ்ரீநிவாச ரெட்டி பேத்தியின் திருமண நிகழ்வு, நவ.21 அன்று நடைபெற்றது. இந்த மணவிழா ஒருங்கிணைந்த ஆந்திரா முழுக்க கவனம் பெற்றது. தெலங்கான முதல்வரான சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி இருவரும் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர்.

மணவிழாவில், இரு மாநில முதல்வர்களுடன் ஸ்ரீநிவாச ரெட்டி

இரு மாநிலங்களுக்கும் இடையிலான நதிநீர் தாவா உள்ளிட்ட சில பிரச்சினைகள் காரணமாக, இரு முதல்வர்களும் நேருக்குநேர் சந்திப்பைத் தவிர்த்து வந்தனர். அந்த இடைவெளியைத் தகர்க்கும் வகையில், ஸ்ரீநிவாச ரெட்டி திருமண நிகழ்வின் முக்கிய விருந்தினர்களாக ஜெகன்மோகனும், சந்திரசேகர் ராவும் ஒன்றாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். இருவரும் அருகருகே அமர்ந்ததும், உரையாடியதும் இரு மாநில மக்கள் மத்தியில் சிலாகிக்கப்பட்டது.

ஆனால் 5 நாள் இடைவெளியில் மீண்டும் இந்தச் சந்திப்பு குறித்து, அவர்கள் கவலைப்படவும் வேண்டியதாயிற்று.

ஸ்ரீநிவாச ரெட்டியின் கரோனா பிரகடனம்

இதற்கு காரணம், தற்போது ஸ்ரீநிவாச ரெட்டிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமண விழா நெடுக, இரு மாநில முதல்வர்கள் அருகே அமர்ந்து உற்சாகமாக உரையாடியபடியும், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுக்காக நெருங்கி போஸ் கொடுத்தபடியும் இருந்திருக்கிறார் ஸ்ரீநிவாச ரெட்டி.

இவருக்கு கரோனா உறுதியானதிலிருந்து, திருமண விழாவில் பங்கேற்ற அனைவருமே கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீநிவாச ரெட்டியுடன் நெருக்கமாக காட்சியளித்த ஜெகன் மோகன் மற்றும் சந்திரசேகர ராவ் ஆகியோருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் முடிவுகள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

கரோனா பரவல் உச்சத்திலிருக்கும்போது, பெருந்தொற்று பரவல் விதிமுறைகளுக்கு மாறாக இரு மாநில முதல்வர்களும், முகக்கவசம் அணியாது திருமண விழாவில் பங்கேற்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

x