பொதுப்பணித் துறை ஊழியரை தாக்கியதாக தளவாய் சுந்தரம் மீது வழக்குப் பதிவு!


தளவாய் சுந்தரம்

கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரமும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து, பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியரைத் தாக்கியதாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் ராஜ்ய சபா எம்.பி, முன்னாள் அமைச்சர் எனப் பல்வேறு பதவிகளில் இருந்தவர் தளவாய் சுந்தரம். முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசில் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகவும் இருந்தார். இப்போது அதிமுக அமைப்புச் செயலாளராகவும் இருக்கும் தளவாய் சுந்தரம், பொதுப்பணித் துறை ஒப்பந்த ஊழியரை தன் ஆதரவாளர்களோடு சேர்ந்து தாக்கியதாக வந்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஒப்பந்தப் பணியாளராக இருப்பவர் நடேஷ். இவர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் இன்று கொடுத்த புகாரில், ‘முகநூலில் தன்னைப் பற்றித் தவறாகப் பதிவிட்டதாக தளவாய் சுந்தரமும் அவரோடு இருந்த 7 பேரும் சேர்ந்து என்னை அடித்தார்கள். என்னை மட்டுமல்லாது என் மனைவியையும் தளவாயுடன் வந்தவர்கள் தாக்கினார்கள்’ என தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 147, 294(பி), 323, 506 (ஐ), 379 (என்.பி) ஆகிய 5 பிரிவுகளின்கீழ் தளவாய் சுந்தரம் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடேஷ்

இதுகுறித்து தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்களிடம் பேசினோம். “தோவாளையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடேஷை பணியமர்த்தியதே தளவாய் சுந்தரம்தான். பொதுவாக பொதுப்பணித் துறை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அந்த, அந்த மாதத்தில் ஊதியம் வராது. அதேநேரம் நடேஷ் அங்கே குடும்பத்தோடு தங்கியிருந்து பணி செய்கிறார். அவருக்கு குடும்பத்தை நடத்த பணம் வேண்டுமே என இரக்கப்பட்டு தளவாய்சுந்தரம் மாதம்தோறும் பண உதவியும் செய்துவந்தார். ஆனால் அந்த நடேஷ், தளவாய் சுந்தரத்தை கொச்சைப்படுத்தி முகநூலில் பதிவுகள் எழுதத் தொடங்கினார். சுற்றுலா மாளிகைக்குச் சென்றபோது இதுபற்றி நடேஷிடம் கேட்கமட்டுமே செய்தார் தளவாய். ஆனால் நடேஷ், ஏதோ உள்நோக்கத்தோடு புகார் கொடுத்திருக்கிறார்” என்று சொன்னார்கள்.

தளவாய் சுந்தரம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

x