எடப்பாடியை அடுத்த வனப்பகுதி கிராமத்துக்குள் புகுந்ததா சிறுத்தை? - வனத் துறை கண்காணிப்பு


சேலம்: ஓமலூர் அருகே நடமாடிய சிறுத்தை இன்னமும் கூண்டில் சிக்காமல் உள்ள நிலையில், எடப்பாடி அருகே கிராமத்தில் ஆடுகளை கொன்ற மர்ம விலங்கும், அதே சிறுத்தை தானா என்பதைக் கண்டறிய 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் ஆட்டுப்பட்டிகளில், டிராக் கேமரா பொருத்தி வனத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை வனச்சரகத்தை ஒட்டியுள்ள காருவள்ளி, எலத்தூர், மேச்சேரி உள்ளிட்ட கிராமங்களில், கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் மாடு, ஆடு, நாய் ஆகியவற்றை மர்ம விலங்கு கடித்து கொன்று வந்தது. இந்நிலையில் டேனிஷ்பேட்டை வனத்தை ஒட்டிய, மூக்கனூர் என்ற இடத்தில் ஒரு பசு மாட்டை கொன்ற சிறுத்தை ஒன்று, மறுநாளும் அந்த மாட்டை தின்பதற்காக வந்த போது, வனத்துறையினர் வைத்த டிராக் கேமராவில் பதிவானது. இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட வன அலுவலர் ஷஷாங் காஷ்யப் ரவி, உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு, டிராக் கேமரா பதிவு மூலம் சிறுத்தை நடமாடியதை உறுதி செய்தனர்.

அந்த சிறுத்தை பெரிய உடலமைப்பு கொண்டதாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சுற்று வட்டார கிராம மக்கள், எச்சரிக்கையுடன் இருப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சிறுத்தை நடமாடிய இடம் உள்பட 5 இடங்களில் கூண்டுகளை வைத்தும், சிறுத்தைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். வனச்சரக அலுவலர்களை கொண்ட குழுவினரும் சிறுத்தைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், 5 நாட்கள் ஆன பின்னரும், சிறுத்தை சிக்காமல் உள்ளது.

இதனிடையே, எடப்பாடி அருகே பக்கநாடு ஊராட்சியில், ஆனைபள்ளம் என்ற இடத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மர்ம விலங்குகினால் நேற்று முன்தினம் கடித்து கொன்று போடப்பட்டது. இது குறித்து சம்பவ இடத்தில் நிலத்தில் இருந்த மர்ம விலங்கின் காலடி தடத்தைக் கொண்டு, அங்கு நடமாடிய மர்ம விலங்கு எது என்பதை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து சேலம் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார் கூறியது: "சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட மூக்கனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இறைச்சி மற்றும் ஆட்டுக்குட்டியுடன் வைக்கப்பட்டுள்ள கூண்டில் சிறுத்தை இன்னமும் சிக்கவில்லை. அங்கு டிரோன் மற்றும் ரோந்து மூலம் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மேட்டூர் வனச்சரகத்தில், எடப்பாடியை அடுத்த பக்கநாடு ஊராட்சி ஆனைப்பள்ளம் என்ற இடத்தில், விவசாயி ஒருவரின் ஆட்டுப் பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டினை மர்ம விலங்கு, இழுத்துச் சென்று, சற்று தூரத்தில் ஆட்டினை குதறி போட்டிருந்தது தெரியவந்தது. இந்த பகுதியில், ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து மர்ம விலங்கு, ஆடுகளை கடித்துக் குதறியும், அவற்றை இழுத்துச் செல்வதாகவும் மக்கள் கூறு கின்றனர்.

எனவே, பக்கநாடு ஊராட்சி ஒட்டிய பகுதியில் நடமாடிய மர்ம விலங்கு எது என்பதை கண்டறிய, 10-க்கும் மேற்பட்ட இடங்களில், விவசாயிகளின் ஆட்டுப்பட்டிகளிலேயே டிராக் கேமராவைப் பொருத்தி இருக்கிறோம். இதன் மூலம் அப்பகுதியில் நடமாடும் மர்ம விலங்கு எந்த வகையை சேர்ந்தது என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறோம். டேனிஷ் பேட்டை வனச்சரகத்தை ஒட்டிய பகுதிகளில் நடமாடிய சிறுத்தையே, பக்கநாடு ஊராட்சியை ஒட்டிய பகுதிக்கும் வந்திருக்க வாய்ப்புள்ளது.

எனவே, பக்கநாடு கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடியை அடுத்த பக்கநாடு ஊராட்சியை அடுத்துள்ள பகுதிகளில், மர்ம விலங்கு நடமாட்டம் காணப்படும் நிலையில், அங்குள்ள விவசாயி ஒருவரின் ஆட்டுப்பட்டியில் வனத்துறையினர் டிராக் கேமராவைப் பொருத்தும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்.