நாகர்கோவில் குண்டு, குழிச் சாலைகளுக்கு விடிவு எப்போது?


நாகர்கோவிலில், பாதாளச் சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பல சாலைகள் பணிகள் முடிந்த நிலையிலும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் இருக்கும் சாலைகள் முழுதுமே குண்டு, குழிகளாக பல்லாங்குழிபோல் காட்சியளிக்கின்றன. இது எப்போது சரிசெய்யப்படும் என வாகன ஓட்டிகள் மத்தியில் ஏக்கமும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அரசியல் போராட்டங்கள்...

நாகர்கோவில் மாநகரத்துக்கு உட்பட்ட சாலைகள் மிகவும் மோசமாகக் குண்டும், குழியுமாகக் கிடக்கின்றன. அதோடு பெருமழையும் சேர்ந்துகொள்ள இப்போது சாலையைக் கடப்பதே பெரும் சவாலாக மாறிப்போயுள்ளது. இந்நிலையில் சிலநாட்களுக்கு முன்பு நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி, சாலைகளை விரைந்து சீர்செய்யக் கேட்டு 48 மணிநேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்தார். காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்தும் நாகர்கோவில் மாநகரில் சாலைகளை சீர்செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு மனுகொடுத்தார்.

இந்தப் பணிகளுக்கு ரூ.26 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு. இந்த நிதி ஒதுக்க திமுக மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் தான் முயற்சிசெய்து வெற்றிபெற்றார் என திமுகவும், எம்.ஆர்.காந்தியின் போராட்ட அறிவிப்பே காரணம் என பாஜகவினரும் மாறி, மாறி வாழ்த்துப் போஸ்டர் ஒட்டிய காட்சிகள் எல்லாம் அரங்கேறின. வாழ்த்துப் போஸ்டர்களைப் பார்த்துவிட்டு, சாலைகள் விரைந்து சீர் செய்யப்படும் என நாகர்கோவில் மக்கள் ஆர்வத்தோடு காத்திருந்த நிலையில், இன்னும்கூட எந்த சாலைப்பணியும் தொடங்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

கோட்டாறு சாலை

மழைக்காலமான இப்போது வாகனங்கள் மிகவும் சிரமத்தோடே இந்தச் சாலையில் சென்று வருகின்றன. சாலைகளில் இருக்கும் குண்டு, குழிகளில் தண்ணீர் நிறைந்து இருப்பதால் எது சாலை, எது குழி என்பதே தெரியாமல் இருக்கிறது. அதிலும் தூய சவேரியார் ஆலயம், ரயில் நிலையம், காய்கறிச் சந்தை, மளிகைக் கடைகள் என நிறைந்திருக்கும் கோட்டாறு பகுதிச் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன.

இத்தனைக்கும் தேசிய நெடுஞ்சாலையான இதன் வழியாகத்தான், சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்குச் செல்ல முடியும். கோட்டாறில் உள்ள புகழ்பெற்ற தூய சவேரியார் பேராலயத் திருவிழாவும் இப்போது தொடங்கியிருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இந்தச் சாலை வழியாகப் பயணிக்கின்றனர். இங்குள்ள குண்டு, குழியினால் பெரிய விபத்துகள் நடக்கும் முன்பு, போர்க்கால அடிப்படையில் சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

x