எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி மரணம்


மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் மகள் எம்.ஜி.சி. லீலாவதி, இன்று சென்னையில் அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார்.

எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதி, தனது சித்தப்பா எம்ஜிஆருக்குச் சிறுநீரக தானம் செய்தவர். உடல்நிலை மோசமடைந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையில் எம்ஜிஆர் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் அது. அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனும் தகவலை, கேரளாவில் இருந்த லீலாவதி, நாளிதழ்கள் மூலம் தெரிந்துகொண்டார். திருமணமாகியிருந்த நிலையிலும் கணவரின் ஒப்புதலுடன் தனது சித்தப்பாவுக்குச் சிறுநீரக தானம் செய்ய முன்வந்தார். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. லீலாவதிதான் தனக்குச் சிறுநீரக தானம் கொடுத்தார் என முதலில் எம்ஜிஆருக்குத் தெரியாது. அது குறித்த தகவல்கள் அவருக்குச் சொல்லப்படவில்லை.

உடல்நலம் பெற்று திரும்பிய எம்ஜிஆருக்கு, சில நாட்களுக்குப் பின்னர் நாளிதழ் ஒன்றின் மூலம் தகவல் தெரிந்தது. வலம்புரி ஜான் எழுதியிருந்த வாழ்த்துரையில் ‘லீலாவதிக்கு நன்றி’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல் அறிந்ததும் லீலாவதியை ராமாவரம் தோட்டத்து இல்லத்துக்கு அழைத்துக் கண்ணீருடன் நன்றி சொன்னார் எம்ஜிஆர். இதை லீலாவதியே பதிவுசெய்திருக்கிறார். குடும்பத்தில் தன்னையும் பிற குழந்தைகளையும் வளர்த்தது எம்ஜிஆர்தான் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டவர் லீலாவதி.

இந்நிலையில், லீலாவதியின் மறைவு எம்ஜிஆர் உறவினர்களிடமும், அதிமுகவின் தீவிர அனுதாபிகளிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

x