திண்டுக்கல்லில் கடைகளுக்குள் புகுந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து


திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து.

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பிரேக் பழுதால் கடைகளுக்குள் அரசு பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று தேனி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை ஓட்டுனர் பழனிச்சாமி இயக்கினார். பேருந்து நிலையத்தை விட்டு அரசு பேருந்து வெளியே வந்து திருவள்ளுவர் சாலையில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக பிரேக் பழுதானதால் ஓட்டுனரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பேருந்து எதிரே உள்ள ஸ்வீட் கடை மற்றும் எலக்டிரானிக் கடைகளுக்குள் புகுந்தது. இதில் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தவர்கள் நல்வாய்ப்பாக தப்பினர். கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த விபத்தில் ஓட்டுனர் பழனிச்சாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பழநியில் இருந்து கிராமப்புறத்திற்கு சென்ற அரசு நகர பேருந்தின் முன்பக்க டயர் கழன்று விபத்திற்குள்ளான நிகழ்வு நடைபெற்றது. அரசு போக்கு வரத்து கழக பேருந்துகளை அச்சமின்றி மக்கள் பயணிக்க ஏதுவாக முறையாக பராமரிக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.