1975-ல் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அறிவித்ததைத் தொடர்ந்து ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அத்வானி, வாஜ்பாயி உள்ளிட்ட பல தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அந்தக் காலட்டத்தில் சீக்கியர் போல் வேடமிட்டு டெல்லி, சென்னை, இலங்கை எனச் சென்று பின்னர் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றவர் சுப்பிரமணியன் சுவாமி. அமெரிக்காவில் இருந்தபடி ஜனசங்கம் சார்பில் பேசிவந்தார். பின்னர் இந்தியா திரும்பி, துணிச்சலாக நாடாளுமன்றத்துக்கும் சென்றுவந்தார். “அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு சுப்பிரமணியன் சுவாமி குஜராத்துக்கும் சென்றிருந்தார். அப்போது, அவரை வரவேற்க ஆர்எஸ்எஸ் அமைப்பால் அனுப்பப்பட்டவர் நரேந்திர மோடி” எனச் சிலர் குறிப்பிடுவதுண்டு. அது உண்மையோ இல்லையோ, இருவரும் நெருக்கடிநிலைக் காலத்தில் மாறுவேடத்தில் சுற்றித் திரிந்தவர்கள்தான். அந்த வகையில் இருவருக்கும் இடையில் சில பொருத்தங்கள் உண்டு.
சோனியா, ஜெயலலிதா, மாயாவதி ஆகியோருடன் கைகோத்து வாஜ்பாயி ஆட்சியைக் கவிழ்த்ததும் இதே சுவாமிதான். அவர்கள் மூவரையும் லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கை என சுவாமி வர்ணித்தார்.
2013-ல், ஜனதா கட்சித் தலைவராக இருந்தபோதே, “நான் பாஜகவில் இருந்தால், அடுத்த மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள்பெற, மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பேன்” என்று சொன்ன சுவாமி, விரைவில் மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமாறு பாஜகவுக்குக் கோரிக்கையும் விடுத்தார். மோடி பிரதமரானால் ராமர் கோயில் கட்டுவார் என ஆரூடம் சொன்னவர் சுவாமிதான். வளர்ச்சி குறித்து மோடியின் பேச்சுகள் நம்பிக்கையளிப்பதாகவும் சுவாமி நம்பினார். குஜராத் கலவரங்கள் தொடர்பாக மோடி மீது எழுந்த குற்றச்சாட்டுகளையும் ஏற்க மறுத்தார். பாஜகவிலும் இணைந்தார்.
இப்படி மோடி மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த சுப்பிரமண்யன் சுவாமி, மோடி பிரதமராகி சில மாதங்களிலேயே மோடி அரசை, குறிப்பாக நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லியைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். அதற்குப் பதிலளித்த மோடி, கட்சியைவிட யாரும் பெரியவர் அல்ல என்று சொன்னதுடன் விளம்பரத்துக்காக இப்படியெல்லாம் விமர்சிக்கக் கூடாது என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். அதேசமயம், பல்வேறு சந்தர்ப்பங்களில் மோடியைப் புகழ்ந்து தள்ளவும் சுவாமி தவறியதில்லை. இந்திரா காந்தியின் நெருக்கடிநிலை நடவடிக்கையைப் பற்றி, 2018-ல் பிரதமர் மோடி விமர்சித்துப் பேசியபோது அதை சுவாமி ஆதரித்தார். அவ்வப்போது மோடியின் துணிச்சலைப் பற்றிப் புகழவும் செய்கிறார். அடுத்த தேர்தலிலும் மோடிதான் வெல்வார் என்றும், அவரை அழுத்திக்கொண்டிருக்கும் பிரச்சினைகளிலிருந்து வெளிவந்து இன்னும் சுதந்திரமாகச் செயல்படுவார் என்றும் சுவாமி ஒருமுறை குறிப்பிட்டார். மறுபுறம், மோடியின் வெளியுறவுக் கொள்கைகளையும் பொருளாதாரக் கொள்கைகளையும் மிகக் கடுமையாக விமர்சித்துவருகிறார் - அதுவும் கட்சிக்குள் இருந்தபடி! போதாக்குறைக்கு மம்தா பானர்ஜிக்குப் புகழ்மாலையும் சூட்டுகிறார்.
டெல்லிக்குச் சென்றிருக்கும் மம்தா பானர்ஜியை, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியின் இல்லத்தில் சென்று சந்தித்துப் பேசியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. இதையடுத்து மம்தாவைப் பிரதமராக்க ‘கிங் மேக்கர்’ அவதாரம் எடுக்கிறாரா சுவாமி என அரசியல் வட்டாரங்கள் பரபரக்கத் தொடங்கிவிட்டன. நாட்டில் ‘சூப்பர் எமெர்ஜென்ஸி’ நிலவுவதாக மோடி அரசை மம்தா விமர்சித்தபோது, அவருக்குக் கண்டனம் தெரிவித்தவர் சுவாமி. என்றாலும் மம்தாவின் துணிச்சல் மீது அவருக்கு ஒரு அபிமானம் உண்டு. பாஜகவால் மம்தா பானர்ஜியை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்ட சுவாமி, பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக மம்தா நிறுத்தப்படலாம் எனக் கடந்த சில ஆண்டுகளாகச் சொல்லிவருகிறார். இத்தாலியின் ரோம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட உலக அமைதி மாநாட்டில் பங்கேற்கச் செல்ல, மம்தாவுக்கு வெளியுறவுத் துறை அனுமதி மறுத்தபோது அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததும் சுவாமிதான்.
இந்நிலையில், மம்தாவுடனான சுவாமியின் சந்திப்பு, மேற்கு வங்கத்துக்கு வெளியே தனது அரசியல் எல்லைகளை விஸ்தரிக்கும் திரிணமூல் காங்கிரஸின் பயணத்துக்கு எந்த வகையில் உதவும் என்பது முக்கியமான கேள்வியாக உருவெடுத்திருக்கிறது.
திரைமறைவில் இருந்து காரியம் சாதிக்கும் சுப்பிரமணியன் சுவாமி, ‘அரசியலின் துர்வாசர்’ எனும் பெயர் எடுக்கும் அளவுக்கு கோபக்காராகவும் அறியப்பட்டவர். வாஜ்பாயியைப் பல சந்தர்ப்பங்களில் வாரியதும் இதே சுவாமிதான். வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அமைச்சர் பொறுப்பு கிடைக்காததால் கோபத்தில் சோனியா, ஜெயலலிதா, மாயாவதி ஆகியோருடன் கைகோத்து வாஜ்பாயி ஆட்சியைக் கவிழ்த்ததும் இதே சுவாமிதான். அவர்கள் மூவரையும் லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கை என வர்ணித்தார். இப்போது மோடியையும் வாருகிறார். மம்தாவுடனும் கைகோக்கிறார். ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், சந்திரசேகர், ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோருடன் ஒப்பிட்டு மம்தாவை மனமாரப் பாராட்டுகிறார். என்ன நடக்குமோ?!