சோழவந்தான் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ-வான மாணிக்கம் இன்று திருப்பூரில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அதிமுகவின் வழிகாட்டுக்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவரே, கட்சியைவிட்டு விலகி, அதுவும் சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் பாஜகவில் இணைந்தது மதுரை மாவட்டத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் அரசு காண்ட்ராக்டராக திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் பொதுவானவராக இருந்த மாணிக்கம், 2011-ல் ஜெயலலிதாவின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்காக பாண்டி கோயில் அருகே உள்ள தன்னுடைய நிலத்தை கொடுத்ததன் மூலம் அதிமுக முக்கியப் புள்ளிகளுக்கு நெருக்கமானார். அந்தத் தொடர்பு ஓபிஎஸ் வரையில் நீண்டு, அதிமுக ஆட்சியிலும் பல காண்ட்ராக்ட்களை எடுத்தார். விளைவாக 2016-ல் அவருக்கு சோழவந்தான் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து, எம்எல்ஏ-வும் ஆனார். அடுத்த சில மாதங்களிலேயே அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, இவரும் அவருக்கு ஆதரவாகச் சென்றார். பிறகு ஓபிஎஸ் சமாதானமானதும், அவருடன் வந்த எம்எல்ஏ-க்களில் மாஃபா பாண்டியராஜனுக்கு மட்டுமே அமைச்சர் பதவி கிடைத்தது. மாணிக்கம் உள்ளிட்ட எம்எல்ஏ-க்களும், அப்போது மதுரை எம்பி-யாக இருந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் டம்மியாகவே இருந்தார்கள்.
இந்த ஆதங்கத்தைத் தணிப்பதற்காக இருவரையும் கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக நியமித்தார் ஓபிஎஸ். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, ஓபிஎஸ் ரொம்பக் கஷ்டப்பட்டு திரும்பவும் இருவருக்கும் சீட் வாங்கிக்கொடுத்தார். ஆனால், முன்னாள் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களுமான செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் தனக்கு ஒத்துழைப்பு வழங்காமல் தோற்கடித்துவிட்டார்கள் என்று வருத்தத்தில் இருந்தார்கள் இவர்கள் இருவரும். இப்போது மாணிக்கம் பாஜகவுக்குப் போய்விட்டதால், சீக்கிரமே கோபாலகிருஷ்ணனும் போய்விடுகிறார் என்கிற பேச்சு கிளம்பியிருக்கிறது.
இதேபோல, சிவகங்கை மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளரும், காரைக்குடி முன்னாள் எம்எல்ஏ-வுமான சோழன் சித பழனிசாமியும் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இவர் ஏற்கெனவே அமமுகவுக்குச் சென்று, அந்தக் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்து மீண்டும் அதிமுக திரும்பியவர். இப்போது பாஜகவுக்குச் சென்றிருப்பதன் மூலம், அதிமுகவுக்கும் எதிர்காலம் இல்லை என்று சொல்கிறாரா? என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது.
பொதுவாக அதிமுகவில் இருந்து விலகுவோர் ஆளுங்கட்சியான திமுகவுக்குப் போவதுதான் வழக்கம். அக்கட்சியும் அவர்களை அழைத்து கவுரவிப்பதும் வழக்கம். சமீபகாலமாக அதிமுகவினர் பாஜகவுக்குச் செல்வது, பாஜகவின் வளர்ச்சியையும், அதிமுகவின் வீழ்ச்சியையும் கண்கூடாகக் காட்டுவதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.