ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


வேதா நிலையம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்துவந்த போயஸ் தோட்டம் (வேதா நிலையம்) இல்லத்தை நினைவிடமாக மாற்ற, கடந்த அதிமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வேதா நிலையத்தை அரசுடமையாக்கி அப்போதைய அரசு சட்டம் இயற்றியது.

தொடர்ந்து ரூ.67.95 கோடி இழப்பீட்டுத் தொகையை முந்தைய அரசு கீழமை நீதிமன்றத்தில் செலுத்தியது. இதை எதிர்த்து, ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களான தீபா மற்றும் தீபக் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

தீபக், தீபா

இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், தீபா மற்றும் தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜெயலலிதா வாழ்ந்த இடத்தைப் புனிதமாகக் கருதி முறையாகப் பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் முந்தைய அரசு தன்னிச்சையாக வேதா நிலையத்தைக் கையகப்படுத்தியதாகச் சட்டம் இயற்றியது தவறு” என வாதிட்டார்.

வேதாநிலையத்தில் ஜெயலலிதா...

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், “பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஜெயலலிதா அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட நேரத்தில் வாரிசுதாரர்களான தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை” என்று தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, இன்று மதியம் தீர்ப்பு வழங்கினார். அதில், ‘‘வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது என்றும், 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களான தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கவேண்டும்’’ என்றும் உத்தரவிட்டார். மேலும், ‘‘வேதா நிலையம் தொடர்பாக செலுத்தவேண்டிய வரிபாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் மேற்கொள்ளலாம்” எனக் கூறிய நீதிபதி, ‘‘வேதா நிலையத்தை அரசுடமையாக்கியதற்காக கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய இழப்பீட்டுத் தொகை ரூ.67.95 கோடியை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

x