“75 ஆண்டுகளாகவே சாலை வசதி இல்லை” - திருப்பூர் ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலை வசதி கோரி இன்று புகார் அளித்த ரெட்டாரவலசு கிராம மக்கள்.

திருப்பூர்: நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும் சாலை வசதி இல்லை என பல தலைமுறை போராட்ட கோரிக்கையை வலியுறுத்தி ரெட்டாரவலசு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளுக்கு பிறகு, தமிழ்நாடு அரசின் வழக்கமான பணிகள் துவங்கி உள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், 3 மாதங்களுக்கு பிறகு இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனுக்கள் அளித்தனர்.

தாராபுரம் அருகே ரெட்டாரவலசு கிராம மக்கள் அளித்த மனுவில்: தாராபுரம் ரெட்டாரவலசு கிராமத்தில் 500 குடும்பத்தை சேர்ந்த சுமார் 1500 பேர் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு இந்திய நாடு சுதந்திரம் வாங்கிய நாளில் இருந்து சாலை வசதி கிடையாது. இது தொடர்பாக பல தலைமுறைகளாக போராடி வருகிறோம். வட்டார வளர்ச்சி அலுவலர் துவங்கி, வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்டவற்றில் இதுவரை பல நூறு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதுவரை எங்களுக்கு தார் சாலை வசதி இல்லை. எனவே பள்ளி செல்லும் குழந்தைகள், வயதான முதியோர் மற்றும் பெண்கள் என அனைவரின் நலனை கருத்தில் கொண்டு தார்சாலை வசதி செய்துதர வேண்டும். இனியும் தாமதிக்கும் பட்சத்தில் கிராம மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.